இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது அண்மையில் இலங்கை நாட்டில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது (0-2) என்ற கணக்கில் இந்த தொடரை இழந்தது. இதன்மூலம் 27 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை அணியிடம் இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்து மோசமான நிலையை சந்தித்தது.
இந்த தொடரில் இந்திய அணியின் தோல்விக்கு பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டம் முக்கியமான காரணமாக பார்க்கப்பட்டாலும், பந்துவீச்சாளர்களின் தரப்பிலும் சுழற்பந்து வீச்சாளர்களை தவிர்த்து வேகப்பந்து வீச்சாளர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. குறிப்பாக இந்த தொடரில் வெகுசில விக்கெட்டுகளை மட்டுமே வேகப்பந்து வீச்சாளர்கள் வீழ்த்தினர்.
இந்த தொடரில் முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷீத் ராணா ஆகியோர் இடம்பெற்றிருந்தாலும் அர்ஷ்தீப் மற்றும் சிராஜ் ஆகியோருக்கே பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைத்தது. அவர்களும் சொல்லிக்கொள்ளும் படி விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை. இந்த தொடரில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ராவுக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பும்ரா இல்லாமல் இந்திய அணியின் பந்துவீச்சு ஸீரோ தான் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஜுனைத் கான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இப்போது தெரிகிறதா? பும்ரா இல்லாமல் இந்திய அணியின் பந்துவீச்சு ஸீரோ என்பதை இப்போது ஒத்துக்கொள்வார்கள்.
இதுஒருபுறம் இருக்க இந்திய அணி இந்த ஒருநாள் தொடரில் தோல்வியை சந்திக்க இந்திய அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீர் எடுத்த சில தவறான முடிவுகளும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்திய அணியின் பிளேயிங் லெவனை அவர் ரோஹித்தின் இஷ்டத்திற்கு விடாமல் அவராக தேர்வு செய்தார் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : ரோஹித்துக்கு அப்றம் விராட் கோலி இல்ல.. 15 வருஷத்துல கடைசியா எப்போன்னு தெரியல.. ஆகாஷ் சோப்ரா வியப்பு
அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக இந்திய அணி இன்னும் 3 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே பங்கேற்று விளையாடவுள்ள வேளையில் இலங்கை அணிக்கெதிரான இந்த தோல்வி இந்திய அணிக்கு மிகப்பெரிய அளவில் ஏமாற்றத்தை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



