
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வரும் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா இதுவரை களமிறங்கிய 3 போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்றுள்ளது. அதனால் அந்தப் பிரிவிலிருந்து ஆஸ்திரேலியா முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அதே பிரிவில் 3 போட்டிகளில் 5 புள்ளிகளை பெற்றுள்ள ஸ்காட்லாந்து 2வது இடத்தை பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை அதிகமாக வைத்துள்ளது.
ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து இதுவரை விளையாடிய 2 போட்டிகளில் ஒரு வெற்றியை கூட பதிவு செய்யவில்லை. குறிப்பாக ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டி மழையால் ரத்தான நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி தோற்றது. அதனால் 1 புள்ளியை மட்டுமே பெற்று 4வது இடத்தில் தவிக்கும் இங்கிலாந்து சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற கடைசி 2 போட்டிகளில் வென்று வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் ஆனந்தம்:
சொல்லப்போனால் கடைசி 2 போட்டிகளில் வென்றாலும் இங்கிலாந்து அணியால் 5 புள்ளிகளை மட்டுமே பெற முடியும். அது போன்ற சூழ்நிலையில் ஜூன் 16இல் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்தாலும் ஸ்காட்லாந்து ரன் ரேட் அடிப்படையில் சூப்பர் 8 சுற்றுக்கு செல்வதற்கு பிரகாச வாய்ப்புள்ளது.
இந்நிலையில் பரம எதிரி இங்கிலாந்து தங்களுக்கு நாக் அவுட் சுற்றில் தொல்லையை கொடுக்கும் என்று ஜோஸ் ஹேசல்வுட் தெரிவித்துள்ளார். எனவே தங்களது கடைசிப் போட்டியில் ஸ்காட்லாந்தின் ரன் ரேட் பாதிக்காத அளவுக்கு ஆஸ்திரேலியா வெற்றி காண முயற்சிக்கும் என்று ஜோஸ் ஹேசல்வுட் தெரிவித்துள்ளார். அதனால் இங்கிலாந்தை லீக் சுற்றுடன் வெளியேற்றினால் அதை விட ஆனந்தம் இருக்க முடியாது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
“இந்த தொடரில் மீண்டும் ஏதோ ஒரு பகுதியில் இங்கிலாந்தை நீங்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை வரும். தங்களுடைய நாளில் வெற்றியை பெறக்கூடிய சில டாப் அணிகளில் இங்கிலாந்தும் ஒன்றாக இருக்கிறது. நாங்கள் டி20 கிரிக்கெட்டில் அவர்களுக்கு எதிராக உண்மையான தடுமாற்றத்தைக் கொண்டுள்ளோம். எனவே மற்ற அனைவருக்கும் நன்மை பயக்கும் போட்டியிலிருந்து அவர்களை வெளியேற்ற முடிந்தால் அதுவே எங்களுடைய ஆர்வமாகும்”
இதையும் படிங்க: அந்த 2 கஷ்டத்தை வெச்சுகிட்டே பும்ரா சிறந்த பவுலராக முன்னேறி.. நம்மள பொய்ன்னு நிரூப்பிச்சுட்டாரு.. கபில் தேவ்
“இருப்பினும் ஸ்காட்லாந்து போட்டி நெருக்கமாக முடியுமா அல்லது இழுக்குமா என்பது எங்களுக்கு தெரியாது. அங்கே சில வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் அதில் வெற்றி பெறுவதற்கான தன்னம்பிக்கையை எடுத்துக் கொள்கிறோம். அதே சமயம் யாரோ ஒருவரை நீங்கள் நாக் அவுட் செய்வது முக்கியமாகும். தங்கள் பங்கிற்கு இங்கிலாந்து செய்ய இன்னும் நிறைய இருக்கிறது. எனவே அந்த சூழ்நிலைகளை நெருங்கியதும் எங்களுக்கு இன்னும் தெளிவாக தெரியும்” என்று கூறினார்.