எப்படி இருந்தாரு ! ஒரே இரவில் வரலாற்றில் 2 மோசமான சாதனை படைத்த நட்சத்திர பவுலர் – எல்லாம் ஆர்சிபி ராசி

CSK vs RCB 2
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் மே 13-ஆம் தேதி நடைபெற்ற 60-வது லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற அந்த விறுவிறுப்பான போட்டியில் பெங்களூருவை தோற்கடித்த பஞ்சாப் 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பங்கேற்ற 12 போட்டிகளில் 6-வது வெற்றியை பதிவு செய்ததுடன் ப்ளே ஆப் சுற்று வாய்ப்பையும் தக்க வைத்துக் கொண்டது. அப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்தாலும் 209 ரன்களை எடுத்து அசத்தியது.

- Advertisement -

அந்த அணிக்கு 60 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த நிலையில் ஷிகர் தவான் 21 (15) ரன்களில் அவுட்டாக அடுத்து பனுக்கா ராஜபக்சா 1 (3) ரன்களில் பெவிலியன் திரும்பினார். இருப்பினும் தவானுடன் அதிரடி காட்டிக்கொண்டிருந்த ஜானி பேர்ஸ்டோ 7 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 66 (29) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த சமயத்தில் வந்த கேப்டன் மயங்க் அகர்வால் 19 (16) ஜிதேஷ் சர்மா 9 (5) என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் மறுபுறம் பெங்களூரு பவுலர்களை புரட்டி எடுத்த லியம் லிவிங்ஸ்டன் 5 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 70 (42) ரன்கள் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்தார்.

பெங்களூரு பரிதாபம்:
அதை தொடர்ந்து 210 என்ற பெரிய இலக்கை துரத்திய பெங்களூருவுக்கு பார்மின்றி தவிக்கும் விராட் கோலி 2 பவுண்டரி 1 சிக்சருடன் அதிரடியாக 20 (14) ரன்களை எடுத்தாலும் மீண்டும் அவுட்டாகி ஏமாற்ற அடுத்த சில ஓவர்களிலேயே கேப்டன் டுப்லஸ்ஸிஸ் 10 (8) ரன்களிலும் மஹிபால் லோம்ரர் 6 (3) ரன்களிலும் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர். அதனால் 40/3 என தடுமாறிய பெங்களூருவை அடுத்ததாக ஜோடி சேர்ந்த கிளன் மேக்ஸ்வெல் – ரஜத் படிடார் அதிரடியாக 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்ற போராடினார்கள்.

Virat Kohli 20

இருப்பினும் மேக்ஸ்வெல் 35 (22) படிடார் 26 (21) என அவர்கள் இருவரையும் பெரிய ரன்களை எடுக்க விடாமல் அடுத்தடுத்த ஓவர்களில் காலி செய்த பஞ்சாப் அடுத்து வந்த பினிஷர் தினேஷ் கார்த்திக்கை 11 (11) ரன்களிலும் சபாஸ் அஹமதை 9 (14) ரன்களிலும் அவுட் செய்து கதையை முடித்தது. இறுதிவரை 20 ஓவர்களில் 155/9 ரன்களை மட்டுமே எடுத்த பெங்களூரு பங்கேற்ற 13 போட்டிகளில் 6-வது தோல்வியை பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் 4-வது இடத்தில் நீடித்தாலும் பிரகாசமாக இருந்த பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை மந்தமடைய செய்து கொண்டது. பஞ்சாப் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ரபாடா 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

ஹேசல்வுட் மோசம்:
இப்போட்டியில் ஆரம்பம் முதலே பெங்களூரு பவுலர்கள் ஜானி பேர்ஸ்டோ, லிவிங்ஸ்டன் ஆகியோருக்கு எதிராக சிறப்பாக பந்து வீச முடியாமல் ரன்களை வாரி வழங்கினார். இருப்பினும் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக ஹர்ஷல் படேல் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும் இலங்கையின் சுழல்பந்து வீச்சாளர் ஹசரங்கா 2 விக்கெட்டுகளை எடுத்து பஞ்சாப்பை மடக்கிப்பிடிக்க நினைத்தனர். ஆனால் அதை சபாஸ் அஹமது, சிராஜ், ஹேசல்வுட் போன்ற 3 முக்கிய பவுலர்கள் 10க்கும் மேற்பட்ட எக்கனாமியில் ரன்களை வாரி வழங்கி வீணடித்தனர்.

RCB vs SRH Josh Hazelwood

குறிப்பாக இப்போட்டிக்கு முன்பு வரை குறைவான ரன்களை மட்டும் கொடுத்து 13 விக்கெட்டுகளை எடுத்து அசத்தி வந்த ஆஸ்திரேலியாவின் ஜோஸ் ஹேசல்வுட் இப்போட்டியில் 4 ஓவர்களில் 64 ரன்களை அள்ளிக் கொடுத்தார். அவருடன் ஜோடியாக சிராஜ் 2 ஓவரில் 36 ரன்கள் கொடுக்க இந்த இருவரும் சேர்ந்து நேற்று 100 ரன்களை கொடுத்தனர். இதில் ஹெசல்வுட் ஒரு தரமான பவுலர் என்பதாலேயே அவரிடம் கேப்டன் டுப்லஸ்ஸிஸ் 4 ஓவர்களை முழுமையாக வழங்கினார்.

- Advertisement -

ஒரே இரவில்:
ஆனால் இதற்கு முந்தைய போட்டி வரை அசத்தலாக செயல்பட்டு வந்த அவருக்கு நேற்று இரவு படுமோசமாக அமைந்தது. இதனால் ஐபிஎல் வரலாற்றில் மோசமான பந்து வீச்சை பதிவு செய்த பெங்களூரு பவுலர் என்ற மோசமான சாதனையை அவர் படைத்துள்ளார். அந்தப் பட்டியல் இதோ:
1. ஜோஸ் ஹேசல்வுட் : 64, 2022*
2. ஷேன் வாட்சன் : 61, 2016
3. டிம் சௌதீ : 61, 2019

hazlewood

2. மேலும் ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் மோசமான பந்து வீச்சை பதிவு செய்த வெளிநாட்டு பவுலர் என்ற மோசமான சாதனையையும் படைத்தார். அந்த பட்டியல் இதோ:
1. ஜோஸ் ஹேசல்வுட் : 0/64, பஞ்சாப்க்கு எதிராக, 2022*
2. மார்கோ யான்சென் : 0/63, குஜராத்க்கு எதிராக, 2022
3. மைக்கேல் நசீர் : 0/62, பெங்களூருவுக்கு எதிராக, 2013

- Advertisement -

இத்தனைக்கும் கடந்த சீசன்களில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னையில் அசத்தலாக செயல்பட்டு வந்த இவர் இப்போது தான் முதல் முறையாக பெங்களூருவுக்கு விளையாடுகிறார். ஆனால் இந்த முதல் சீசனிலையே அதுவும் ஒரே இரவில் மோசமான 2 வரலாற்று சாதனைகள் படைக்கும் அளவுக்கு பரிதாபத்திற்கு உள்ளாகியுள்ளார்.

இதையும் படிங்க : ஹேக்கர் வேலையா ! ஐபிஎல் 2022 தொடருடன் ஓய்வை அறிவித்த சிஎஸ்கே வீரர் – சிறிது நேரத்தில் வாபஸ்

ஒருவேளை எத்தனையோ பவுலர்களை இதுபோல் பரிதாப சாதனை படைக்க வைத்த பெங்களூரு அணியின் ராசி தான் இதற்கு காரணமோ என்று பல ரசிகர்கள் ஹேசல்வுட் மீது பரிதாபப்படுகின்றனர்.

Advertisement