குருவுக்கு நிகரான சிஷ்யன், தோனியின் மேஜிக் சாதனையை சமன் செய்த ஜோஸ் பட்லர் – விவரம் இதோ

MS Dhoni Jos Buttler
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 2022 ஐசிசி டி20 உலகக்கோப்பையின் சாம்பியன் பட்டத்தை ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து வென்று சாதனை படைத்துள்ளது. முதல் நாளிலிருந்தே எதிர்பாராத திருப்புங்கள் அரங்கேறிய இந்த தொடரில் ஆரம்பத்திலேயே இந்தியா மற்றும் ஜிம்பாப்வேவிடம் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்ததால் கதை முடிந்ததாக கருதப்பட்ட பாகிஸ்தான் கடைசி நேரத்தில் நெதர்லாந்திடம் தென்னாப்பிரிக்கா தோற்று வெளியேறிய அதிர்ஷ்டத்தை பயன்படுத்தி அரையிறுதிக்குள் நுழைந்து நியூசிலாந்தை தோற்கடித்தது.

அப்படி அதிர்ஷ்டத்துடன் பைனலுக்கு வந்த பாகிஸ்தான் 1992இல் இம்ரான் கான் தலைமையில் இங்கிலாந்தை தோற்கடித்தது போல் இம்முறையும் வெல்வோம் என்று பகல் கனவு கண்டதுடன் போட்டிக்கு முன்பாகவே வாயில் அதிகமாக பேசியது. ஆனால் களத்தில் அபாரமான செயல்பாடுகளால் பேசிய இங்கிலாந்து கடைசி நேர ட்விஸ்ட் போல் அதே மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்து 1992 ஃபைனலில் சந்தித்த தோல்விக்கு 30 வருடங்கள் கழித்து பழி தீர்த்து கோப்பையை வென்றது.

- Advertisement -

அதனால் 2010க்குப்பின் 2வது கோப்பையை வென்ற அந்த அணி டி20 உலக கோப்பையை வரலாற்றில் வெற்றிகரமான அணி என்ற வெஸ்ட் இண்டீஸ் சாதனையை சமன் செய்தது. மேலும் 2019இல் ஏற்கனவே 50 ஓவர் உலகக் கோப்பையை வென்று சாம்பியனாக திகழும் அந்த அணி இந்த வெற்றியால் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நேரத்தில் 20 ஓவர் மற்றும் 50 ஓவர் ஆகிய 2 உலக கோப்பைகளையும் வென்ற முதல் அணி என்ற வரலாற்றை படைத்தது. இந்த வெற்றிக்கு இங்கிலாந்தை தலைமை தங்கி அற்புதமாக வழி நடத்திய ஜோஸ் பட்லர் உண்மையாகவே மிகப்பெரிய பாராட்டுக்குரியவராக செயல்பட்டார்.

தோனிக்கு நிகராக:
ஏனெனில் 2017க்குப்பின் இங்கிலாந்தை அதிரடி படையாக மாற்றி 2019இல் கோப்பையை வென்று கொடுத்த இயன் மோர்கன் காயம் மற்றும் சுமாரான பார்ம் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திடீரென்று ஓய்வு பெற்றார். அப்போது புதிய கேப்டனாக பொறுப்பேற்ற அவர் ஆரம்பத்திலேயே இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் முறையே 2 – 1 என்ற கணக்கில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து விமர்சனங்களை எதிர்கொண்டார்.

- Advertisement -

போதாக்குறைக்கு ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோ போன்ற முக்கிய வீரர்கள் காயத்தால் ஏற்கனவே வெளியேறிய நிலையில் கடைசி நேரத்தில் மார்க் வுட், டேவிட் மாலன் ஆகிய முக்கிய வீரர்களும் ஃபைனலுக்கு முன்பாக வெளியேறினர். ஆனாலும் மனம் தளராத அவர் இருக்கும் வீரர்களை வைத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடந்த டி20 தொடரில் 4 – 3 (7) என்ற கணக்கிலும் டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் 2 – 1 (3) என்ற கணக்கிலும் வீழ்த்தி தொடரை வென்றது போல் இந்த முக்கிய தொடரிலும் அபாரமாக செயல்பட்டு இங்கிலாந்துக்கு 2வது சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார்.

அந்த வகையில் ஏற்கனவே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இந்தியாவுக்கு எதிரான செமி ஃபைனல் உட்பட பெரும்பாலான போட்டிகளில் அசத்திய அவர் கேப்டனாகவும் சாதனை முதல் தொடரிலேயே சாதனை படைத்துள்ளார். அதிலும் 2007க்குப்பின் டி20 உலக கோப்பை வரலாற்றில் சாம்பியன் பட்டம் என்ற 2வது விக்கெட் கீப்பர் கேப்டன் என்ற மகத்தான எம்எஸ் தோனியின் வரலாற்று சாதனையை 15 வருடங்கள் கழித்து சமன் செய்துள்ள ஜோஸ் பட்லர் புதிய சாதனை படைத்துள்ளார்.

முன்னதாக தோனியை ரோல் மாடலாக வைத்து செயல்படும் நிறைய நட்சத்திர வீரர்களில் ஜோஸ் பட்லரும் ஒருவர் என்றால் மிகையாகாது. ஏனெனில் அவரை போலவே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அதிரடியாக விளையாடும் ஜோஸ் பட்லர் கடந்த 2020 ஐபிஎல் தொடரில் தோனியின் ரசிகராக மாறி அவருடைய கையொப்பமிட்ட ஜெர்சியை பரிசாக பெற்றது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம். ஆனால் அந்த ஜெர்சியை வாங்கி அடுத்த 2 வருடங்களில் குருவுக்கு நிகரான சிஷ்யனை போல் தோனியின் சாதனையை ஜோஸ் பட்லர் சமன் செய்துள்ளது உண்மையாகவே அவருடைய உழைப்புக்கு கிடைத்த பரிசாகும்.

Advertisement