சச்சினை விட சீக்கிரமா வைபவ் சூர்யவன்ஷி புகழ்பெற இதுவே காரணம் – ஜாஸ் பட்லர் கருத்து

Jos Buttler
- Advertisement -

இந்தியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய 15 வயதான இளம் துவக்க ஆட்டக்காரரான வைபவ் சூர்யவன்ஷி 16 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் 5 அரைசதம் என 776 ரன்கள் குவித்து இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராக ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார். அதோடு மேலும் பல விருதுகளையும் இந்த ஐபிஎல் தொடரில் அவர் பெற்றிருந்தார்.

சச்சினை விட சூர்யவன்ஷி கவனம் ஈர்க்க இதுவே காரணம் : ஜாஸ் பட்லர்

சர்வதேச பவுலர்களுக்கு எதிராக முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாடும் அவர் பெரிய பெரிய சிக்ஸர்களையும் எளிதாக அடிப்பதனால் அவருக்கு இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்று பலரும் ஆதரவு தெரிவித்த வேளையில் ஐ.பி.எல் தொடர் முடிந்த கையோடு அறிவிக்கப்பட்டுள்ள அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரில் வைபவ் சூர்யவன்ஷி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக ஜூன் 26-ஆம் தேதி துவங்கவுள்ள அயர்லாந்து தொடரில் நிச்சயம் அவர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அவர் அயர்லாந்து தொடரில் அறிமுகமாகும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக மிகக் குறைந்த வயதில் அறிமுகமான வீரர் என்ற சாதனையில் முதலிடத்தில் இருக்கும் சச்சின் டெண்டுல்கரை முறியடித்து முதலிடத்தினை பெறுவார் என்பது உறுதி.

இவ்வேளையில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய இங்கிலாந்து அணியின் முன்னணி வீரரான ஜாஸ் பட்லர் வைபவ் சூர்யவன்ஷி சச்சினை விட வெகு விரைவாக அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து புகழ்பெற என்ன காரணம்? என்பது குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : சச்சின் டெண்டுல்கர் அவருடைய 16-வது வயதில் அறிமுகமானார். அவர் அறிமுகமான சூழ்நிலை குறித்து ஆஷிஷ் கபூரிடம் கேட்டு தெரிந்து கொண்டேன்.

சச்சின் அறிமுகமான காலத்தில் செய்தித்தாள்களில் மட்டுமே அவருடைய பெயர் வரும். மற்றபடி களத்தில் சென்று போட்டிகளை பார்க்கும் மக்கள் மற்றும் தொலை காட்சிகளில் போட்டியை பார்க்கும் வெகு சிலரே சச்சினின் ஆட்டத்தை கண்டனர். அப்போது சமூக ஊடகங்களோ, ஹைலைட் வீடியோக்களோ கிடையாது. எனவே சச்சின் பேட்டிங்கை பெரிதாக யாரும் நேரடியாக கண்டு காணவில்லை. அதேவேளையில் அவரது அசாத்தியமான திறமை பேசு பொருளாக மட்டுமே பரவலாக இருந்து வந்தது.

இதையும் படிங்க : இன்னும் 3 ரன்கள் மட்டுமே தேவை.. ஜாக் காலிஸை பின்னுக்கு தள்ள காத்திருக்கும் ரோஹித் சர்மா – விவரம் இதோ

ஆனால் தற்போதைய நிலை வேறு. வைபவ் சூர்யவன்ஷி இன்னும் சர்வதேச போட்டிகளில் அறிமுகம் ஆகவில்லை என்றாலும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் அவரது ஆட்டத்தை இணையத்தின் மூலம் கண்டு களித்துள்ளனர். இதன் காரணமாகவே அவர் சச்சினை விட வெகுவிரைவாக உலகளவில் புகழ்பெற்றுள்ளார் என ஜாஸ் பட்லர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement