இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நடப்பு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியானது நேற்று கயானா நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி சூழலை கருத்தில் கொண்டு முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது :
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக ரோஹித் சர்மா 57 ரன்களையும், சூரியகுமார் யாதவ் 47 ரன்களையும் குவித்து அசத்தினர். கடினமான இந்த ஆடுகளத்தில் இந்திய அணி பேட்டிங்கில் சிறப்பாகவே செயல்பட்டது.
அதனைத்தொடர்ந்து 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்களுக்கு சுருண்டது.
இதன் காரணமாக இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் இறுதி போட்டியில் விளையாட தகுதி பெற்றது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்த இரண்டாவது அரையிறுதி போட்டியின் தோல்விக்கு பிறகு பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் கூறுகையில் :
இந்திய அணியை நாங்கள் இந்த போட்டியில் கூடுதலாக 20 முதல் 25 ரன்கள் அடிக்க விட்டு விட்டோம். சுழலுக்கு சாதகமான இந்த மைதானத்தில் மொயின் அலிக்கு ஒரு ஓவரை கூட நான் கொடுக்கவில்லை. கொடுத்திருந்தால் நிச்சயம் போட்டியில் மாற்றம் ஏற்பட்டிருக்கும். மொயின் அலிக்கு பந்து வீச வாய்ப்பு வழங்காதது என் தவறு தான்.
இதையும் படிங்க : 3 பேர் ரெடியா இருந்தப்போ.. எந்த ஐன்ஸ்டீன் இந்த முடிவை எடுத்தது? இங்கிலாந்தை விளாசி இந்தியாவை பாராட்டிய அக்தர்
இந்திய அணி இந்த மைதானத்தின் தன்மையை புரிந்து கொண்டு மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியது. எங்களை விட அவர்கள் அனைத்து வகையிலும் சிறப்பாக செயல்பட்டு இந்த வெற்றியை பெற்று இருக்கிறார்கள். இந்த வெற்றிக்கு இந்திய அணி தகுதியானது தான் என பட்லர் கூறியது குறிப்பிடத்தக்கது.



