ஆஸ்திரேலியா தொடரை வெற்றிகரமாக முடித்துவிட்டு நாடு திரும்பியுள்ள இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து அணியுடன் மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கிறது. தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி அந்த சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா வர இருக்கிறது. அதன்படி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள், 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 5ஆம் தேதி துவங்குகறது. நான்கு போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது. முதல் இரண்டு போட்டியும் சென்னையில் நடைபெற அடுத்த இரண்டு போட்டியும் அகமதாபாத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த தொடரின் 3வது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடர் குறித்து பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் தங்களது கருத்துக்களை கூறிவரும் நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னணி அதிரடி வீரரான ஜோஸ் பட்லர் இந்திய அணிக்கு எதிரான இந்த தொடர் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

இந்திய அணியில் விராட் கோலி கம்பேக் கொடுத்துள்ளார். கடந்த சில நாட்களாக விளையாடாமல் இருக்கும் அவர் எங்களுடன் விளையாட உள்ளார். இந்திய அணியை திறம்பட வழிநடத்தவும் தனது ஆட்டத்தில் சிறப்பாக விளையாடும் பசியோடு அவர் இருக்கிறார். அது எங்களுக்கு இந்த தொடரில் சவாலான காரியமாக இருக்கும். மேலும் அவரை கட்டுப்படுத்துவது என்பது சுலபமானது கிடையாது. ஏனெனில் சர்வதேச அளவில் சிறந்த பேட்ஸ்மேனாக விளங்கும் கோலி சிறிது இடைவெளிக்குப் பிறகு திரும்பி உள்ளதால் அவர் தனது முழு பலத்தையும் இது தொடர்பில் வெளிப்படுத்துவார்.

இந்திய அணி தற்போது தனது சிறப்பான ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் பெற்ற வெற்றியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டுக்கு எடுத்துக்காட்டியுள்ளது. கோலி இல்லாதபோதும் வீரர்கள் காயம் பட்டபோதும் விடாமுயற்சியோடு இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



