இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வென்ற நிலையில் இரண்டாவது போட்டி பிப்ரவரி 9ஆம் தேதி கட்டாக் நகரில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 49.5 ஓவரில் 305 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அடுத்ததாக விளையாடிய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி சதத்தை அடித்து 119 ரன்கள் குவித்தார். தற்சமயத்தில் சுமாரான ஃபார்மில் இருந்ததால் சந்தித்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த அவர் தன்னைத் தரமான வீரர் என்பதை மீண்டும் நிரூபித்தார். அவருடன் விளையாடிய சுப்மன் கில் 60, ஸ்ரேயாஸ் ஐயர் 44, அக்சர் படேல் 41 எடுத்தார்கள்.
இந்தியா வெற்றி:
அதனால் 44.3 ஓவரில் 308-6 ரன்கள் அடுத்த இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 2 – 0 என்ற கணக்கில் இந்தத் தொடரை ஆரம்பத்திலேயே வென்றுள்ளது. மறுபுறம் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜேமி ஓவர்டன் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இந்த வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய கேப்டன் ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இந்தப் போட்டியில் 350 ரன்கள் அடித்திருந்தால் இந்தியாவை வீழ்த்தி இருப்போம் என்று இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ஆனால் பேட்டிங்கில் ஃபினிஷிங் செய்யத் தவறியதால் தோற்றதாகத் தெரிவிக்கும் அவர் ரோகித் சர்மா வெற்றியைப் பறித்ததாகவும் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
அபாரமான ரோஹித்:
“பேட்டிங்கில் நாங்கள் நல்ல இடத்தை எட்டுவதற்கான நிலையைப் பெற்றோம். ஆனால் அது போன்ற சூழ்நிலையில் எங்களில் ஒருவர் நெருப்பாக விளையாடி அந்த நிலையை 350க்கு தள்ளுவது அவசியம். ரோஹித் சர்மாவிடம் மற்றும் ஒரு சிறப்பான இன்னிங்ஸ் வந்தது. அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் இதை நீண்ட காலமாக செய்து வருகிறார்”
இதையும் படிங்க: 37 வயதில் சச்சின், சேவாக், டிராவிட்டை முந்திய ரோஹித் சர்மா.. ஜெயசூர்யாவை முந்தி உலக சாதனை
“பிட்ச்சில் பந்துகள் கொஞ்சம் வழுக்கிக் கொண்டு வந்தது. அதில் எங்களை விட எதிரணி கொஞ்சம் நன்றாக விளையாடினார்கள். நாங்கள் 330 – 350 ரன்களை அடிப்பதற்கு முயற்சித்தும். ஒருவேளை அது கட்டுப்படுத்துவதற்கு நல்ல இலக்காக இருந்திருக்கக்கூடும். வெற்றிகள் கிடைக்காவிட்டாலும் நாங்கள் சரியானப் பாதையில் செல்கிறோம். அதில் நாங்கள் தொடர்ந்து செல்ல வேண்டியது அவசியமாகும்” என்று கூறினார்.



