இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 2025 சாம்பியன்ஸ் ட்ராஃபிக்கு தயாராகும் நோக்கத்தில் நடைபெறும் அந்தத் தொடரில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் இந்தியா வென்றுள்ளது. அதனால் 2 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரை கைப்பற்றியுள்ள இந்தியா தங்களை வலுவான அணி என்பதை காண்பித்துள்ளது.
முன்னதாக சுமாரான ஃபார்மில் இருந்து வந்த இந்திய கேப்டன் ரோஹித் சர்மா கட்டாக் நகரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் சதத்தை அடித்தார். 37 வயதில் ஓய்வு பெறுமாறு விமர்சனங்களை சந்தித்த அவர் அதற்கெல்லாம் அசராமல் 12 பவுண்டரி 7 சிக்ஸர்களை பறக்க விட்டு 119 (90) ரன்கள் விளாசி இந்தியாவை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
பட்லர் பாராட்டு:
இந்நிலையில் ரோஹித் சர்மாவை பார்த்து இந்தியா மட்டுமின்றி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களும் கற்றுக் கொள்ளலாம் என்று இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் இரண்டாவது போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு. “ரோகித் சர்மா போன்ற திறன் கொண்ட ஒருவர் அழுத்தத்தில் இருக்கும் சூழ்நிலையில் நாம் சற்று எளிதாக இருக்க வேண்டும் என்பது நம் அனைவருக்கும் ஒரு நல்ல நினைவூட்டலாக இருக்கலாம்”
“நீண்டக் காலமாக அவர் சிறப்பாக செயல்படக் கூடியவராக இருந்து வருகிறார். அவரைப் போன்ற டாப் வீரர்கள் நல்ல விஷயங்களுடன் வருவார்கள். அது போன்றவற்றை ரோகித் இன்று செய்தார். சிறந்த வீரர்களுக்கு எதிராக நீங்கள் எப்போது விளையாடினாலும் இது போன்ற இன்னிங்ஸ் அவர்கள் விளையாடும் போது இரு அணிகளைச் சேர்ந்தவர்களும் அதைப் பார்த்து கற்றுக் கொள்ளலாம்”
தரமான ரோஹித்:
“ரோகித் ஒரு அற்புதமான இன்னிங்ஸ் விளையாடினார். போட்டியின் பல்வேறு சமயங்களில் கியர்களை மேலும் கீழும் போட்டு அழுத்தத்தை உள்வாங்கிய அவர் அதை மீண்டும் எதிரணி மீது செலுத்தினார். இன்று எங்களுக்கு பில் சால்ட் – பென் டக்கெட் ஆகியோர் நல்ல துவக்கத்தை கொடுத்தனர். அப்போது கடைசி நேரத்தில் ஒருவர் உண்மையாக அதிரடியான விளையாடி 330 – 350 ரன்கள் அடித்திருக்க வேண்டும்”
இதையும் படிங்க: ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபியில் குல்தீப் – வருண் ஆகியோரில் யார் விளையாட வேண்டும்? ரெய்னா பேட்டி
“அதை செய்திருந்தால் இலக்கை கட்டுப்படுத்த வாய்ப்பு கிடைத்திருக்கலாம். இருப்பினும் சிறந்த இன்னிங்ஸ் விளையாடிய ரோஹித் சர்மாவுக்கு பாராட்டுக்கள். ஒருநாள் கிரிக்கெட்டில் நீண்ட காலமாக உயர்தரத்தை நிர்ணயித்துள்ள அவர் இன்று மற்றுமொரு நல்ல விளையாடினார்” எனக் கூறினார். இதை அடுத்து கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற இங்கிலாந்து முயற்சிக்க உள்ளது.



