IPL 2023 : நம்பவே முடியல நீங்களா இப்படி? 16 வருஷத்துல இப்படி யாரும் பண்ணதில்ல – ஜோஸ் பட்லர் படைத்த மோசமான சாதனை

Jos Buttler
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 19ஆம் தேதி நடைபெற்ற 66வது லீக் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ராஜஸ்தான் அசாத்தியமான பிளே ஆப் சுற்று வைப்பை தக்க வைத்துக் கொண்டது. அழகான தரம்சாலாவில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் சாம் கரண் 49* (31) ஜிதேஷ் சர்மா 44 (28) ஷாருக்கான் 41* (23) என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பொறுப்பான ரன் குவிப்பால் 20 ஓவர்களில் 187/5 ரன்கள் எடுக்க ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக நவ்தீப் ஷைனி 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

அதை துரத்திய ராஜஸ்தானுக்கு ரபாடா வீசிய 2வது ஓவரில் நம்பிக்கை நட்சத்திரம் ஜோஸ் பட்லர் ஆரம்பத்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் கேப்டன் சஞ்சு சாம்சன் 2 (3) ரன்களில் நடையை கட்டினார். இருப்பினும் மறுபுறம் அட்டகாசமாக செயல்பட்ட இளம் வீரர் ஜெய்ஸ்வால் 8 பவுண்டரியுடன் 50 (36) ரன்களும் தேவ்தூத் படிக்கல் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 51 (30) ரன்களும் சிம்ரோன் ஹெட்மயர் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 46* (28) ரன்களும் எடுக்க இறுதியில் ரியன் பராக் 20 (12) ரன்களும் துருவ் ஜுரேல் 10* (4) ரன்களும் எடுத்து 19.4 ஓவரிலேயே வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

பட்லரா இது:
அதனால் ரபாடா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை எடுத்தும் தோல்வியை சந்தித்த பஞ்சாப் லீக் சுற்றுடன் அதிகாரப்பூர்வமாக வெளியேறி தங்களுடைய முதல் கோப்பையை வெல்லும் கனவை மீண்டும் நிஜமாக்க தவறியது. அதை விட இந்த போட்டியில் ராஜஸ்தானுக்கு விளையாடும் இங்கிலாந்தைச் சேர்ந்த நம்பிக்கை நட்சத்திரம் ஜோஸ் பட்லர் மீண்டும் டக் அவுட்டானது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது.

ஏனெனில் சமீப காலங்களாகவே சர்வதேச அளவில் சிறப்பாக செயல்பட்டு 2022 டி20 உலக கோப்பை கேப்டனாக வென்ற அவர் கடந்த வருடம் ஐபிஎல் தொடரில் 4 சதங்கள் உட்பட 863 ரன்கள் விளாசி சாதனைகள் மேல் சாதனை படைத்து ஆரஞ்சு தொப்பியை வென்று ராஜஸ்தான் ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றினார். இந்த சீசனிலும் சிறப்பான துவக்கத்தை பெற்ற அவர் இடையில் லேசான காயத்தை சந்தித்து தடுமாறு துவங்கினார்.

- Advertisement -

ஆனால் அதன் உச்சகட்டமாக கடந்த 3 போட்டிகளில் முறையே 0 (3), 0 (2), 0 (4) என ஹாட்ரிக் டக் அவுட்டான அவர் இந்த சீசனில் மொத்தமாக 5 முறை டக் அவுட்டாகியுள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட சீசனில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையையும் அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ஜோஸ் பட்லர் : 5* (2023)
2. ஹெர்சல் கிப்ஸ் : 4 (2009)
3. மிதுன் மன்ஹாஸ் : 4 (2011)
4. மணிஷ் பாண்டே : 4 (2012)
5. ஷிகர் தவான் : 4 (2020)
6. நிக்கோலஸ் பூரான் : 4 (2021)
7. இயன் மோர்கன் : 4 (2021)

அதிலும் குறிப்பாக 2016இல் அறிமுகமான முதல் போட்டியிலே டக் அவுட்டான அவர் 2022 வரை விளையாடிய 81 இன்னிங்சில் மேற்கொண்டு டக் அவுட்டாகவில்லை. அந்த வகையில் 2016 – 2022 வரை 1 முறை மட்டுமே டக் அவுட்டான அவர் இந்த வருடம் மட்டும் 14 இன்னிங்ஸில் 5 முறை டக் அவுட்டாகியுள்ளார் என்பது ரசிகர்களுக்கு ஆச்சரியமாகவே அமைகிறது. அதனால் சமீப காலங்களில் டக் அவுட்டாகி மோசமாக சாதனை படைத்த இந்தியாவின் சூரியகுமார் யாதவ், ரோஹித் சர்மா எவ்ளோ பரவாயில்லை என்பது போல் இவருடைய சாதனை இருப்பதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:21 வயதிலேயே ஐ.பி.எல் வரலாற்றில் மாபெரும் சாதனையை நிகழ்த்தி அசத்திய ஜெய்ஸ்வால் – 15 ஆண்டுகால சாதனை முறியடிப்பு

இத்தனைக்கும் இதே சீசனில் முதலில் பேட்டிங் செய்த போட்டிகளில் 333 ரன்களை 155 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ள அவர் சேசிங் செய்யும் போட்டிகளில் தான் வெறும் 59 ரன்களை 86.8 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து 5 முறை டக் அவுட்டாகியுள்ளார் என்பது மற்றுமொரு வியப்பை ஏற்படுத்தும் புள்ளி விவரமாக இருக்கிறது.

Advertisement