ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. அந்த வெற்றிக்கு 15 விக்கெட்டுகள் எடுத்த ஜஸ்ப்ரித் பும்ரா தொடர்நாயகன் விருது வென்று மிகவும் முக்கிய பங்காற்றினார் அதே போல ஹர்திக் பாண்டியாவும் ஆல் ரவுண்டராக விளையாடி இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.
குறிப்பாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் முக்கிய நேரத்தில் ஹென்றிச் க்ளாஸென் விக்கெட்டை எடுத்த அவர் கடைசி ஓவரில் டேவிட் மில்லரை சூர்யகுமாரின் அபாரக் கேட்ச்சால் அவுட்டாக்கினார். அதனால் 17 வருடங்கள் கழித்து இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல உதவிய அவர் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதார். மேலும் ஐபிஎல் பணத்துக்காக மட்டுமின்றி தாம் நாட்டுக்காகவும் உண்மையாக விளையாடுவேன் என்பதையும் பாண்டியா நிரூபித்தார்.
பும்ராவுக்கு நிகராக:
ஏனெனில் அத்தொடருக்கு முன்பாக நடைபெற்ற ஐபிஎல் 2024 தொடரில் சுமாராக விளையாடிய பாண்டியா மும்பை தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். அதை விட ரோஹித் சர்மாவை கழற்றி விட்டு கேப்டனாக நியமித்ததால் மும்பை ரசிகர்களே அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் சந்தித்த வலிகள் தான் 2024 டி20 உலகக் கோப்பையில் பாண்டியா சிறப்பாக செயல்பட உதவியதாக தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஜான்டி ரோட்ஸ் கூறியுள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய துறைகளில் அசத்தக்கூடிய பாண்டியா எந்த அணியிலும் முக்கிய வீரராக இருப்பார். அவரால் பேட்டிங்கில் என்ன செய்ய முடியும் என்பது நமக்குத் தெரியும். அவர் பேட்டிங்கில் மேலயும் கீழேயும் விளையாடும் திறமையைக் கொண்டுள்ளதை நாம் பார்த்துள்ளோம்”
ஐபிஎல் வலிகள்:
“அவர் எங்கே விளையாடினாலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர். இருப்பினும் முழுமையான வேகத்தில் பந்துக்கு வீசவில்லை எனில் பாண்டியாவுக்கு அணியில் என்ன வேலை? என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அந்த சூழ்நிலைகளிலும் தம்மால் என்ன செய்ய முடியும் என்பதை அவர் காண்பித்துள்ளார். நாம் எப்போதும் பேட்டிங் பார்ட்னர்ஷிப் பற்றி பேசுகிறோம். உண்மையில் பவுலிங் பார்ட்னர்ஷிப்பும் முக்கியம்”
இதையும் படிங்க: இந்த நேரத்தில் பாபர் அசாமுக்கு விராட் கோலி இதை செய்யனும்.. பாகிஸ்தான் ரசிகர்கள் கோரிக்கை
“ஏனெனில் ஜஸ்ப்ரித் பும்ரா ஒரு ஓவரில் அபாரமாக பந்து வீசி ரன்கள் கொடுக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அடுத்த ஓவரில் பவுண்டரி சென்றால் பும்ரா போராடியதற்கு எந்த பயனும் இல்லாமல் போய்விடும். கடினமான ஐபிஎல் ஹர்திக் பாண்டியாவை உத்வேகமடைய வைத்து உடலளவிலும் மனதளவிலும் பலமடைய வைத்தது” என்று கூறினார்.



