இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தங்களது சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இரண்டாவது போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் 2 – 0* என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் இந்தியா தம்முடைய சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை காண்பித்து வருகிறது.
முன்னதாக கொல்கத்தாவில் நடைபெற்ற இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்தை 132க்கு சுருட்டிய இந்தியா 12.5 ஓவரில் எளிதாக சேசிங் செய்து வென்றது. ஆனால் அப்போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் கொடுத்த பல கேட்ச்கள் காற்றில் வந்தும் அதிர்ஷ்டமின்மையால் தவறியதாக இங்கிலாந்து வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் கூறினார். எனவே இரண்டாவது போட்டியில் இந்தியாவை 40/6 என தெறிக்க விடுவோம் என்று அவர் சவால் விட்டிருந்தார்.
ஜோப்ராவின் சவால்:
அந்த சூழ்நிலையில் சென்னையில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி ஆரம்பத்திலேயே சில விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. குறிப்பாக 166 ரன்களை துரத்திய இந்தியா 9 ஓவரில் 78-5 என சரிந்ததால் ரசிகர்கள் கவலையடைந்தார்கள். ஆனால் அப்போது நங்கூரமாகவும் அதிரடியாகவும் விளையாடிய திலக் வர்மா 72* (55) ரன்கள் விளாசி இந்தியாவை கடைசி ஓவரில் வெற்றி பெற வைத்தார்.
குறிப்பாக ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய 16வது ஓவரில் பட்டையை கிளப்பிய அவர் 19 ரன்கள் அடித்து போட்டியை இந்தியாவின் பக்கம் கொண்டு வந்தார். மறுபுறம் ஆரம்பத்தில் நன்றாக பவுலிங் செய்த ஆர்ச்சரை நேரம் செல்ல செல்ல இந்திய பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கினார்கள். அதனால் 4 ஓவரில் 1 விக்கெட் எடுத்த அவர் 60 ரன்களை வாரி வழங்கினார்.
மோசமான சாதனை:
அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக ஒரு போட்டியில் ஜோப்ரா ஆர்ச்சர் 60 ரன்கள் வழங்கிய பரிதாபத்தை சந்தித்தார். அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய மோசமான பந்து வீச்சையும் அவர் பதிவு செய்தார். அந்த வகையில் சவால் விட்ட அவருக்கு இந்திய அணி மோசமான சாதனையை பார்சல் கட்டியது என்றே சொல்லலாம்.
இதையும் படிங்க: சென்னையில் 3 சிக்ஸ் அடிக்காம தோனியை ஃபாலோ பண்ண திலக்.. சூப்பர்ஸ்டாரா வருவாரு.. ஆகாஷ் சோப்ரா
இதைப் பார்க்கும் இந்திய ரசிகர்கள் என்ன தம்பி என்னாச்சு? என்று சமூக வலைதளங்களில் பதிலடி கொடுக்கிறார்கள். இதைத் தொடர்ந்து இந்தத் தொடரின் மூன்றாவது போட்டி ராஜ்கோட் நகரில் நடைபெற உள்ளது. அந்தப் போட்டியிலும் வென்று ஆரம்பத்திலேயே தொடரை கைப்பற்ற இந்திய அணி தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.



