ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா விளையாடும் கடைசி டெஸ்ட் போட்டி உச்சக்கட்டத்தை தொட்டுள்ளது. அந்தப் போட்டியில் 374 ரன்களை துரத்தும் இங்கிலாந்து 4வது நாள் முடிவில் 339/6 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் கைவசம் 4 விக்கெட்டுகளை வைத்துள்ள அந்த அணியின் வெற்றிக்கு வெறும் 35 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.
அதன் காரணமாக இங்கிலாந்து வெற்றி பெற்று 3 – 1 (5) என்ற கணக்கில் இந்தத் தொடரின் கோப்பையை வெல்வதற்கு அதிகப்படியான வாய்ப்புள்ளது. மறுபுறம் இந்திய அணி வெற்றி பெற 35 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்ற பரிதாபமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெறுவது அசாத்தியமானதாகவே பார்க்கப்படுகிறது.
ரிஷப் பண்ட் போல:
இதற்கிடையே இங்கிலாந்து வீரர் கிறிஸ் ஓக்ஸ் முதல் நாளில் தோள்பட்டையில் சந்தித்த காயத்தால் எஞ்சிய நாட்களில் விளையாடவில்லை. குறிப்பாக முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்ய வராத அவர் இன்றும் வரமாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஒருவேளை அவர் வராமல் போனால் 3 விக்கெட்டுகளை மட்டுமே எடுக்க வேண்டும் என்பதால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு கொஞ்சம் அதிகமாகும்.
இந்நிலையில் கிறிஸ் ஓக்ஸ் தேவைப்பட்டால் இந்தியாவை தோற்கடிப்பதற்காக காயத்துடன் வந்து விளையாடுவார் என்று இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அறிவித்துள்ளார். குறிப்பாக கடந்த போட்டியில் ரிஷப் பண்ட் உடைந்த காலுடன் பேட்டிங் செய்ய வந்தது போல் ஓக்ஸ் இங்கிலாந்துக்காக களமிறங்க தயாராக இருப்பதாக ரூட் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
ஜோ ரூட் அறிவிப்பு:
“கிறிஸ் ஓக்ஸ் எங்களுடைய உடை மாற்றும் அறையில் வெள்ளை ஜெர்ஸியை அணிந்து விளையாடுவதற்கு தயாராக இருந்ததை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். எனவே அவரும் எங்களைப் போல் வெற்றிக்காக தயாராக இருக்கிறார். இது வீரர்கள் வெற்றிக்காக தங்களுடைய உடலை கோட்டின் மேலே வைக்க வேண்டிய தொடராக இருக்கிறது”
இதையும் படிங்க: இந்திய அணிக்கு எதிராக ஸ்டீவ் ஸ்மித் நிகழ்த்திய மாபெரும் சாதனையை சமன் செய்த ஜோ ரூட் – விவரம் இதோ
“கிறிஸ் ஓக்ஸ் நிறைய வலியுடன் இருக்கிறார். ஆனால் இந்தத் தொடரில் அதையும் தாண்டி வெற்றிக்காக போராடிய மற்ற வீரர்களை நாம் பார்த்தோம். ரிஷப் பண்ட் உடைந்த காலுடன் பேட்டிங் செய்ய வந்தார். அவரைப் போன்ற வீரர்கள் அங்கேயும் இங்கேயும் உடம்பில் அடி வாங்கினார்கள். ஆனால் அவருக்கு நிறைய காயம் ஏற்பட்டது. எனவே கிறிஸ் ஓக்ஸ்க்கு களமிறங்க வேண்டிய சூழ்நிலை வராது என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால் தேவைப்பட்டால் அவர் தயாராக இருக்கிறார்” என்று கூறினார்.



