இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 277 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை அபாரமாக வீழ்த்தியது. அதுமட்டுமின்றி இத்தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அடுத்த இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்க உள்ள நிலையில் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி சார்பாக பல மாற்றங்கள் இருக்கும் என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். முதலாவது டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதமடித்து அசத்திய ஜோ ரூட் அதே சிறப்பான ஆட்டத்தை இரண்டாவது போட்டியிலும் தொடர்வேன் என்று குறிப்பிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் ஆன்லைன் மூலம் நடந்த உரையாடலின் போது கூறியதாவது :
நாளைய போட்டியில் ஆர்ச்சர், ஆண்டர்சன் மற்றும் பெஸ் ஆகியோர் காயம் காரணமாக விளையாட மாட்டார்கள். இது எங்களுக்கு சற்று பின்னடைவு தான் என்றாலும் ஒரு மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் மூன்றாவது போட்டியில் ஜாப்ரா ஆர்ச்சர் 3 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார். அதேபோன்று இந்திய அணிக்கு எதிரான கடைசி இரண்டு போட்டிகளிலும் ஆண்டர்சன் விளையாட வேண்டும் என்ற காரணத்தினாலேயே இரண்டாவது போட்டியில் அவருக்கு ஓய்வு அளித்துள்ளோம்.

அதுமட்டுமின்றி சுழற்பந்து வீச்சாளர் பெஸ் அணியில் இடம்பெறாதது எங்களுக்கு ஒரு கடினமான முடிவு தான். இருப்பினும் அவருக்கு ஓய்வு தேவை என்பதனால் அவர் நாளைய போட்டியில் விளையாட மாட்டார். முதல் டெஸ்ட் போட்டியின் போது பார்வையாளர்கள் இல்லாதது வருத்தமாக இருந்தது ஆனால் நாளைய போட்டியில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட இருப்பது மிகுந்த உற்சாகத்தை தருகிறது என கூறியுள்ளார்.

ஏற்கனவே இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் பந்தில் இருந்தே தங்களது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவார்கள் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய அணியின் கேப்டன் கோலியும் தனது கேப்டன்சியை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.



