
இலங்கைக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மான்செஸ்டர் நகரில் ஆகஸ்ட் 21ஆம் தேதி துவங்கிய 3 போட்டிகள் கொண்ட அந்தத் தொடரின் முதல் போட்டியில் இலங்கை 236, 326 ரன்கள் குவித்தது. அதை துரத்திய இங்கிலாந்து 358, 205/5 ரன்கள் எளிதாக வெற்றி பெற்றது.
அதனால் பென் ஸ்டோக்ஸ் இல்லாமலேயே இலங்கையை தோற்கடித்த இங்கிலாந்து 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. முன்னதாக அப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் 42 ரன்கள் குவித்தார். அதேபோல 2வது இன்னிங்ஸில் 62* ரன்கள் குவித்த அவர் இங்கிலாந்தின் வெற்றியில் பங்காற்றினார்.
அந்த 62 ரன்களையும் சேர்த்து தனது டெஸ்ட் கேரியரில் இதுவரை ஜோ ரூட் 64 அரை சதங்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அரை சதங்கள் அடித்த மூன்றாவது வீரர் என்ற ஜாம்பவான்கள் ராகுல் டிராவிட் மற்றும் ஆலன் பார்டர் சாதனையை உடைத்த அவர் புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. சச்சின் டெண்டுல்கர் : 68
2. சிவ்நரேன் சந்தர்பால் : 66
3. ஜோ ரூட் : 64*
4. ராகுல் டிராவிட்/ஆலன் பார்டர் : தலா 63
அது போக டெஸ்ட் கிரிக்கெட்டில் 4வது இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த 3வது வீரர் என்ற சாதனையையும் ரூட் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. சச்சின் டெண்டுல்கர் : 1625
2. அலாஸ்டர் குக்/கிரேம் ஸ்மித் : தலா 1611
3. ஜோ ரூட் : 1589*
4. சிவ்நரேன் சந்தர்பால் : 1580
5. ராகுல் டிராவிட் : 1575
அந்த வகையில் தொடர்ந்து அசத்தலாக விளையாடி வரும் ஜோ ரூட் மொத்தமாக தம்முடைய கேரியரில் இதுவரை 144 டெஸ்ட் போட்டிகளில் 12131* ரன்கள் குவித்துள்ளார். தற்போது 33 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் இன்னும் 4 வருடங்கள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது போன்ற சூழ்நிலையில் வருடத்திற்கு 800 – 1000 ரன்கள் அடித்தால் கூட அவரால் இன்னும் 4000 ரன்களை எளிதாக அடிக்க முடியும்.
இதையும் படிங்க: உங்களோட சிரிப்பை மிஸ் பண்ணுவேன்.. எங்களுக்காக நிறைய கொடுத்துருக்கீங்க.. தவானை வாழ்த்திய விராட் கோலி
அதை செய்தால் சச்சின் டெண்டுல்கரை (15921) முந்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற உலக சாதனையையும் ஜோ ரூட் படைப்பார். தற்சமயத்தில் அவர் விளையாடுவதை பார்த்தால் அதற்கு வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. சொல்லப்போனால் ரூட் சாதனையை படைப்பார் என்று ரிக்கி பாண்டிங், தினேஷ் கார்த்திக் போன்ற முன்னாள் வீரர்கள் சமீபத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.