
இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. பெங்களூரு அணி பெற்ற இந்த வெற்றி அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றது. அதோடு இத்தனை காண்டு ஐபிஎல் வரலாற்றில் கோப்பையை வெல்லாமல் தவித்து வந்த ஆர்சிபி அணி தங்களது நீண்ட ஆண்டு கால ஏக்கத்தையும் தீர்த்துக் கொண்டது.
இந்த 2025 ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி பெற்ற வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜிதேஷ் சர்மாவும் திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல. ஏனெனில் அந்த அளவிற்கு அவர் ஆர்.சி.பி அணிக்காக மிகச் சிறப்பான ஆட்டத்தை 2025 ஐபிஎல் தொடரில் வழங்கியிருந்தார்.
அதிலும் குறிப்பாக பினிஷர் ரோலில் களமிறங்கிய அவர் 176 ஸ்ட்ரைக் கட்டுடன் 261 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அவருடைய இந்த சிறப்பான ஆட்டமும் பெங்களூரு அணிக்கு பலம் சேர்த்தது என்று கூறினால் அது மிகையல்ல. இந்நிலையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் தான் மிகச் சிறப்பாக விளையாடியதற்கு விராட் கோலி அளித்த அறிவுரைகள் தான் காரணம் என்று சில கருத்துக்களை ஜிதேஷ் சர்மா பகிர்ந்துள்ளார்,
அந்த வகையில் அவர் கூறியதாவது : நான் சிறிய ஊரிலிருந்து வந்தவன். எனவே மூத்தவர்களுக்கு எவ்வாறு மரியாதை கொடுக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும். விராட் கோலியிடம் பேசுவதே பெரிய விஷயம். எனவே நான் அவரை எவ்விதத்திலும் தொந்தரவு செய்யாமல் கிரிக்கெட் குறித்து மட்டுமே அவரிடம் பேசுவேன்.
அவர் கொடுத்த ஆலோசனைகள் என்னுடைய பேட்டிங்கை மேலும் பலப்படுத்தின. அதோடு அழுத்தமான வேளைகளில் எவ்வாறு சமாளித்து அணியை முன்னுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது குறித்தும் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன். என்னை பொருத்தவரை விராட் கோலி எனக்கு ஒரு அண்ணனை போன்றவர்.
இதையும் படிங்க : 76 ரன்ஸ்.. பச்சை புள்ளையை அடித்து நொறுக்கிய தெ.ஆ.. 22 வயது இங்கிலாந்து வீரர் மோசமான உலக சாதனை
அவர் கூறும் எந்த ஒரு விஷயத்தையும் கேள்வியே கேட்காமல் பின்பற்றுவேன் என ஜிதேஷ் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் 2025 ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் ஜிதேஷ் சர்மா இடம்பிடித்துள்ளார்.