IPL 2023 : ரிஷப் பண்ட்டுக்கு பதிலான மாற்று வீரர் இந்தியாவுக்கு கிடைச்சுட்டாரு – ரசிகர்கள் எதிர்பாரா வீரரை பாராட்டும் பீட்டர்சன்

Pietersen
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ரிஷப் பண்ட் ஆரம்பத்திலேயே காயத்தால் வெளியேறியது பெரிய பின்னடைவாக அமைந்து 5 தொடர் தோல்விகளை பரிசளித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடிப்பதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதே போல இந்தியாவுக்காகவும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் தடுமாறினாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை மிஞ்சிய செயல்பாடுகளை வெளிப்படுத்தி காபா போன்ற மறக்க முடியாத வெற்றிகளை பெற்றுக் கொடுத்து முக்கிய வீரராக ஜொலித்து வரும் அவர் சமீபத்திய பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் பங்கேற்காதது பெரிய பின்னடைவாக அமைந்தது.

தற்போது சீராக குணமடைந்து வரும் அவர் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் உலகக்கோப்பை ஆகிய தொடர்களிலும் பங்கேற்க மாட்டார் என்பதும் இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே பின்னடைவை கொடுத்துள்ளது. இருப்பினும் அவருக்கு பதிலாக இஷான் கிசான், கேஎல் ராகுல், கேஎஸ் பரத் போன்றவர்கள் விக்கெட் கீப்பராக விளையாடி வந்தாலும் யாருமே இதுவரை திருப்தியளிக்கும் செயல்பாடுகளை வெளிப்படுத்தவில்லை.

- Advertisement -

பீட்டர்சன் பாராட்டு:
மொத்தத்தில் இந்திய அணியில் ரிஷப் பண்ட்டுக்கு சரியான மாற்று வீரர் இன்னும் கிடைக்கவில்லை என்றே சொல்லலாம். இந்நிலையில் இதே ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விக்கெட் கீப்பராக விளையாடும் ஜிதேஷ் சர்மா இந்திய அணியில் ரிஷப் பண்ட்டுக்கு பதிலான மாற்று வீரராக கிடைத்துள்ளதாக முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் பாராட்டியுள்ளார். மகாராஷ்டிராவை சேர்ந்த இவர் உள்ளூர் கிரிக்கெட்டில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் கடந்த சீசனில் முதல் முறையாக வெறும் 20 லட்சத்துக்கு பஞ்சாப் அணியில் வாங்கப் பட்டார்.

அதில் 12 போட்டிகளில் கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக விளையாடிய அவர் 234 ரன்களை 163.64 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி அனைவரது கவனத்தை ஈர்த்தார். குறிப்பாக தாமாக இருந்தால் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பையில் விக்கெட் கீப்பராக ஜிதேஷ் சர்மாவை தேர்வு செய்வேன் என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் பாராட்டியது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. அந்த நிலையில் இந்த சீசனிலும் வெறும் 20 லட்சத்துக்கு பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் அவர் இதுவரை நடைபெற்ற 7 போட்டிகளில் 145 ரன்களை 149.98 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி வெற்றிகளில் முக்கிய பங்காற்றி வருகிறார்.

- Advertisement -

குறிப்பாக மும்பைக்கு எதிரான போட்டியில் கடைசி நேரத்தில் களமிறங்கிய அவர் வெறும் 7 பந்துகளில் 4 சிக்ஸர்களை பறக்க விட்டு 25 ரன்களை 357.14 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு கருப்பு குதிரையாக செயல்பட்டார். அப்படி அதிரடியாக விளையாடும் தன்மையைக் கொண்ட அவர் ரிஷப் பண்ட்டுக்கு மாற்று வீரராக குறைந்தபட்சம் இந்திய டி20 அணியில் அசத்தும் தன்மையை கொண்டுள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ள பீட்டர்சன் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“ரிஷப் பண்ட்டுக்கு பதிலான மாற்று வீரர் இந்தியாவுக்கு கிடைத்து விட்டார். ஜிதேஷ் சர்மா. பஞ்சாப் கிங்ஸ் அணியில் விக்கெட் கீப்பராக விளையாடும் அவரும் ஸ்பெஷலானவராக தோன்றுகிறார். எனவே ரிசப் பண்ட் மீண்டும் திரும்புவதற்கு நீண்ட நாட்கள் ஆகும் பட்சத்தில் இந்திய அணியில் அந்த இடத்தை நிரப்புவதற்கு அவர் மிகவும் சரியானவர் என்று நான் நினைக்கிறேன். குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் வெறும் 7 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் அவர் 25 ரன்கள் எடுத்தது பஞ்சாப் அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தது”

இதையும் படிங்க:IPL 2023 : வேணும்னா பாருங்க இந்த வருடத்துடன் தோனி ரிட்டையர் ஆகமாட்டாரு – பிரட் லீ கூறும் காரணம் இதோ

“அதே போல் இந்த ஐபிஎல் தொடரில் சில வயதான வீரர்கள் அற்புதமாக செயல்படுகிறார்கள். அவர்களிடம் அனுபவம் இருந்தாலும் சில புதிய யுக்திகளை கற்று வருகிறார்கள். குறிப்பாக டு பிளேஸிஸ் இந்த சீசனில் நம்ப முடியாத அளவுக்கு அசத்துகிறார். டேவிட் வார்னர் சிறப்பாக செயல்படும் நிலையில் சென்னை அணிக்காக ரகானே கடந்த ஞாயிற்றுக்கிழமை அபாரமாக செயல்பட்டார்” என்று கூறினார்.

Advertisement