இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் செட்டேஸ்வர் புஜாரா அனைத்து விதமான போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2010 – 2023 இந்தியாவுக்காக 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் 7195 ரன்கள் அடித்தார். 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை இந்தியா வென்றது உட்பட அவர் பல வெற்றிகளில் முக்கிய பங்காற்றினார்.
அப்படிப்பட்ட அவர் 37 வயதில் வருங்கால வீரர்களுக்கு வழி விட்டு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு சச்சின் டெண்டுல்கர் முதல் ரிஷப் பண்ட் வரை ஏராளமான முன்னாள் இந்நாள் வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பை தமக்கு முதல் முறையாக புஜாரா தான் ஏற்படுத்திக் கொடுத்ததாக இந்திய வீரர் ஜெய்தேவ் உனட்கட் கூறியுள்ளார்.
புஜாராவால் ஐபிஎல் வாய்ப்பு:
அதாவது தம்முடைய உள்ளூர் மாநில அணியான சௌராஷ்ட்ராவுக்கு விளையாடிய உனட்கட் திறமையை உணர்ந்த புஜாரா 2010 ஐபிஎல் தொடரில் கங்குலி தலைமையிலான கொல்கத்தா அணியில் விளையாடுவதற்கு பரிந்துரைத்துள்ளார். அங்கே தன்னுடைய திறமையைக் காண்பித்த உனட்கட் உடனடியாக கொல்கத்தாவுக்கு விளையாடும் வாய்ப்பைப் பெற்றார். அது குறித்து உனட்கட் தம்முடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.
“”ஹாய் ஜெய்தேவ், இது செட்டேஸ்வர். நான் தாதாவிடம் (கங்குலி) பேசியுள்ளேன். நீங்கள் கொல்கத்தா அணியின் முகாமிற்கு செல்ல வேண்டும். நீங்கள் நன்றாக பவுலிங் செய்கிறீர்கள். அதை தொடருங்கள்” என்பதே நம்முடைய ஒரு ரஞ்சிகோப்பை வலைப்பயிற்சிக்குப் பின் நாம் பேசிக்கொண்ட உரையாடல்களாகும். 2010இல் அப்போது நான் நெட் பவுலராக மட்டுமே இருந்தேன்”
உனட்கட் உருக்கம்:
“அப்போது உங்களைப் பற்றி எனக்கு மிகவும் குறைவாகவே தெரியும். நாளடைவில் நாம் சிறந்த நண்பர்களாகி களத்திலும் களத்திற்கு வெளியேயும் நல்ல நினைவுகளைப் பகிர்ந்து கொண்டோம். விளையாட்டில் நீங்கள் வெளிப்படுத்திய உங்களுடைய உறுதி, திடத்தன்மை ஆகியவற்றை அனைவரும் பேசுகிறார்கள். வருங்காலத் தலைமுறையும் அதைப் பற்றி பேசும்”
இதையும் படிங்க: தோனி விக்கெட் கீப்பிங் பயிற்சியை நிறுத்த இதுதான் காரணம்.. பலநாள் ரகசியத்தை உடைத்த கோச் – விவரம் இதோ
“அது அதற்கு தகுதியானது. உங்களுடைய வேடிக்கையான, குறும்பான, சத்தமான பக்கங்களும் இருந்தன. குறிப்பாக நாம் கால்பந்து மற்றும் அட்டை விளையாட்டு (கார்ட் கேம்ஸ்) சம்பந்தமாக சில நேரங்களில் மோசமாக சண்டையிட்டுள்ளோம். சில வேடிக்கையான விஷயங்களையும் நாம் விவாதித்துள்ளோம். இன்று உங்களுடைய அலங்கரிக்கப்பட்ட கேரியரை முடிக்கும் தருணம் எனக்கு பெருமையாகவும் கொஞ்சம் உணர்வுபூர்வமாகவும் இருக்கிறது. உங்களை என்னுடைய சீனியர், சக வீரர், சகோதரர் என்று அழைப்பதற்காக நான் சூப்பரான பெருமைப்படுகிறேன்” என்று புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார்.



