- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ரஞ்சிக் கோப்பை 2024: எல்லாரும் தமிழ்நாட்டை பாத்து கத்துக்கோங்க.. சௌராஷ்ட்ரா கேப்டன் உனட்கட் பாராட்டு

இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரான ரஞ்சிக் கோப்பையின் 2024 – 25 சீசன் அக்டோபர் 11ம் தேதி துவங்கியது. அதில் கோவையில் நடைபெற்ற எலைட் குரூப் டி பிரிவின் ஒரு போட்டியில் சௌராஷ்ட்ராவை இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் சாய் கிஷோர் தலைமையிலான தமிழ்நாடு அணி தோற்கடித்து வெற்றி பெற்றது.

முன்னதாக அந்தப் போட்டியில் 3வது நாள் மதியத்திற்கு மேல் கோயம்புத்தூரில் உள்ள எஸ்என்ஆர் காலேஜ் மைதானத்தில் பலத்த மழை பெய்தது. அதனால் மைதானத்தின் பவுண்டரி பகுதிகளில் தண்ணீர் குளம் போல தேங்கியிருந்தது. அதன் காரணமாக 4வது நாளில் போட்டி துவங்குவதற்கு அதிக தாமதம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

கலக்கிய கோவை:

ஆனால் இரவு நேரத்தில் மழை நின்றதைத் தொடர்ந்து மைதான பராமரிப்பாளர்கள் தீயாக வேலை செய்து தண்ணீரை வெளியேற்றினார்கள். அதற்கு தகுந்தார் போல் தண்ணீரை வெளியிடுவதற்கான வசதியும் மைதானத்தில் துல்லியமாக செய்யப்பட்டிருந்தது. அதனால் போட்டி திட்டமிட்டபடி நான்காவது நாள் காலை 9.30 மணிக்கு துவங்கியது. ஒருவேளை அதில் தாமதம் ஏற்பட்டிருந்தால் தமிழ்நாடு வெற்றியை விட்டிருக்கும் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு மைதானங்களில் சிறந்த மழை நீர் வடிகால் வசதி செய்யப்பட்டுள்ளதாக சௌராஷ்ட்ரா அணியின் கேப்டன் ஜெய்தேவ் உனட்கட் பாராட்டியுள்ளார். இதை இந்தியாவில் உள்ள மற்ற மாநில வாரியங்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி தனது ட்விட்டரில் மழை பெய்ததற்கு முன் பின் ஆகிய 2 சூழ்நிலைகளின் வீடியோக்களையும் சேர்த்து உனட்கட் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

தமிழ்நாட்டுக்கு பாராட்டு:

“முதல் வீடியோவுக்கும் இரண்டாவது வீடியோவுக்கும் 12 மணி நேரங்கள் மட்டுமே வித்தியாசம். அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் தமிழ்நாடு சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளை கொண்டுள்ளது. தமிழ்நாட்டிலிருந்து கடந்த காலங்களிலும் தற்போதும் சாம்பியன் வீரர்கள் வருவதற்கான அழகான மரபுக்கு இதுவே காரணமாக இருக்கலாம். இந்தப் போட்டியில் நாங்கள் தோல்வியை சந்தித்திருந்தாலும் 3வது நாள் மாலையில் பலத்த மழை பெய்தது”

இதையும் படிங்க: தொடர்ந்து மழை பெய்தால் என்ன செய்ய வேண்டும்? ரோஹித் சர்மா எடுக்கப்போகும் முடிவு? – விவரம் இதோ

“ஆனால் நான்காவது நாள் காலை 9.30 மணிக்கு ஆட்டம் துவங்குவதற்கு மைதான பராமரிப்பாளர்கள் எவ்வளவு விரைவாக விஷயங்களை வேலை செய்தார்கள் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எல்லாவற்றிக்கும் மேலாக ஒரு சாம்பியன் அணியாக இருப்பதற்கு நல்ல வீரர்களை தாண்டி இது போன்றவர்கள் தேவை. ஒவ்வொரு சங்கமும் இதிலிருந்து உதாரணம் எடுக்கும் என்று நம்புகிறேன். வெல்டன் டிஎன்சிஏ” என்று பதிவிட்டுள்ளார்.

- Advertisement -