இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளராக ஜெய் ஷா கடந்த 2019 முதல் செயல்பட்டு வருகிறார். சௌரவ் கங்குலி புதிய தலைவராக பொறுப்பேற்ற போது அவரும் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால் கங்குலி பதவி விலகிய பின்பு 2வது முறையாக தொடர்ந்து செயலாளராக செயல்பட்டு வரும் ஜெய் ஷா இந்திய கிரிக்கெட்டில் சில முன்னேற்றங்களுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறார்.
குறிப்பாக முழுமையான மகளிர் ஐபிஎல் தொடரை பிசிசிஐ நடத்துவதற்கு ஜெய் ஷா முக்கிய காரணமாக திகழ்கிறார். அதே போல டெஸ்ட் கிரிக்கெட்டில் வீரர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக புதிய ஊக்கத்தொகை கொள்கையை ஜெய் ஷா கொண்டு வந்துள்ளார். அந்த வகையில் இந்திய கிரிக்கெட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் ஜெய் ஷா ரசிகர்களிடையேயும் புகழ்பெற்றவராக உள்ளார்.
ஐசிசி அமைப்பில்:
இந்நிலையில் ஒட்டுமொத்த உலக கிரிக்கெட்டை கட்டுப்படுத்தும் ஐசிசி அமைப்பின் புதிய தலைவராக ஜெய் ஷா பொறுப்பேற்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. குறிப்பாக தற்போது நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜார்ஜ் பார்க்லே ஐசிசி சேர்மனாக இருந்து வருகிறார். கடந்த 2020இல் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் 2022ஆம் ஆண்டு மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இருப்பினும் தற்போது 3வது முறையாக தலைவராக இருக்க விரும்பாத ஜார்ஜ் பார்க்லேவின் பதவி காலம் வரும் நவம்பர் மாதம் 30ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. எனவே புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வேலைகளை ஐசிசி துவங்கியுள்ளது. அதற்காக விருப்பமுள்ள தகுதியான நபர்கள் ஆகஸ்ட் 27ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்புமாறு ஐசிசி கேட்டுக் கொண்டுள்ளது.
35 வயதில்:
தற்போது அந்த பதவிக்கு ஜெய் ஷா விண்ணப்பிக்க உள்ளார். ஐசிசி விதிமுறைகளின் படி தலைவர் பதவியை 16 நாட்டு உறுப்பினர்கள் வாக்களித்து தேர்ந்தெடுப்பார்கள். அந்த 16 ஓட்டுகளில் 9 ஓட்டுக்கள் இருந்தால் 51% வாக்குகளைப் பெற்று ஒருவர் தலைவராக தேர்வாக முடியும். மறுபுறம் ஜெய் ஷா பாகிஸ்தானை தவிர்த்து மற்ற அனைத்து நாடுகளின் ஆதரவை பெற்றவராக அறியப்படுகிறார்.
இதையும் படிங்க: அதுக்கு சமமான தொடரில்.. ஜனவரி 8ஆம் தேதி இந்தியாவை என்ன செஞ்சுருப்போம்ன்னு பாருங்க.. ஸ்டார்க் சவால்
எனவே விண்ணப்பிக்கும் பட்சத்தில் ஐசிசியின் அடுத்த தலைவராக ஜெய் ஷா தேர்ந்தெடுக்கப்பட பிரகாச வாய்ப்பு உருவாகியுள்ளது. அப்படி நடந்தால் 35 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஐசிசி வரலாற்றில் மிகவும் இளம் வயதில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராக உலக சாதனை படைப்பார். அத்துடன் ஜகன்மோகன் டால்மியா, சரத் பவார், தமிழ்நாட்டின் என் சீனிவாசன், சஷாங் மனோகர் ஆகியோருக்குப் பின் ஐசிசி தலைவரான 4வது இந்தியர் என்ற பெருமையும் அவர் பெறுவார். அப்படி ஐசிசி தலைவராக ஜெய் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டால் பிசிசிஐ செயலாளர் பதவியை ராஜினாமா செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.



