நட்சத்திர இந்திய வீரர் விராட் கோலி ஆகஸ்ட் 18ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய 16வது வருட பயணத்தை நிறைவு செய்தார். டெல்லியைச் சேர்ந்த அவர் இந்தியா 2008 அண்டர்-19 உலகக் கோப்பையை கேப்டனாக வெல்வதற்கு முக்கிய பங்காற்றி சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அப்போதிலிருந்து டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்தும் அவர் இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக உருவெடுத்துள்ளார்.
மேலும் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இடத்தை நிரப்பும் அளவுக்கு விளையாடி வரும் அவர் இதுவரை 26000+ ரன்களும் 80 சதங்களும் குவித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பை ஃபைனலில் ஆட்டநாயகன் விருது வென்ற அவர் இந்தியா 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.
ஸ்பெஷல் வாழ்த்து:
அதே போல 2017 – 2021 காலகட்டங்களில் விராட் கோலி இந்தியாவின் முழு நேர கேப்டனாக செயல்பட்டார். அவருடைய தலைமையில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று இந்தியா வரலாறு படைத்தது. அத்துடன் 2016 – 2021 வரை தொடர்ந்து இந்தியாவை உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக ஜொலிக்க வைத்த அவர் வெற்றிகரமான இந்திய கேப்டனாகவும் சாதனை படைத்துள்ளார்.
உலகின் மிகச் சிறந்த ஃபீல்டராகவும் கருதப்படும் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் ஃபிட்னஸ் எனும் வார்த்தைக்கு அடையாளமாக திகழ்கிறார். அந்த வகையில் 34 வயதிலேயே ஜாம்பவானாக உருவெடுத்துள்ள விராட் கோலி பல இளம் வீரர்களுக்கு ரோல் மாடலாக திகழ்கிறார். அப்படி சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளை புரிந்து வரும் அவருக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
ஆனால் அவர்களுக்கு மத்தியில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா விடுத்துள்ள வாழ்த்து வைரலாகி வருகிறது. ஏனெனில் விராட் கோலியை அவர் ஒரு சாதாரண ரசிகரை போல “கிங்” என்ற வார்த்தையை பயன்படுத்தி பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “16 வருடங்களுக்கு முன்பாக இன்று விராட் கோலி 19 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக காலடி வைத்தார்”
இதையும் படிங்க: இந்தியாவை பி டீம்ன்னு சொன்னாங்க.. உண்மையான காரணமே வேற.. இம்முறை விடமாட்டோம்.. ஹேசல்வுட் பேட்டி
“அங்கிருந்து அவர் ஒரு ஜாம்பவானுக்கு உண்டான கேரியரை துவங்கும் அடையாளத்தை உருவாக்கினார். சர்வதேச கிரிக்கெட்டில் 16 வருடங்களை நிறைவு செய்தமைக்கு வாழ்த்துக்கள் கிங்” என்று பதிவிட்டுள்ளார். அதை பார்க்கும் ரசிகர்கள் பிசிசிஐ செயலாளரே கிங் என்று பாராட்டுவது லிஸ்டிலேயே இல்லையே என வியப்பை வெளிப்படுத்துகின்றனர். மேலும் இதிலிருந்து ஜெய் ஷா முதலில் விராட் கோலி ரசிகர் பின்பு தான் பிசிசிஐ செயலாளர் என்று தெளிவாக தெரிவதாகவும் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.



