
கடந்த சில மாதங்களாக இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியின் பேட்டிங் மீது அனைவருக்கும் கேள்வி எழுந்து வருகிறது. கிட்டத்தட்ட ஆறு போட்டிகளுக்கு ஒருமுறை சதமடித்து வந்த அவர் தற்போது 22 போட்டிகள் ஆகியும் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. அவரது பேட்டிங் சொதப்பல் காரணமாக நியூசிலாந்து மண்ணில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியை இந்திய அணி இழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், விராட் கோலியை பற்றி பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் வீரர் ஜாவித் மியான்தத் புகழ்ந்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது : நான் அதிகம் அவர் பற்றி பேச தேவையில்லை. அவரது ஆட்டமே அவருக்காக பேசுகிறது.
என்னிடம் யார் உலகின் சிறந்த பேட்ஸ்மென் என்று கேட்கப்பட்ட போது விராட் கோலி என்று கூறினேன். புள்ளிவிவரங்களும் அதைத்தான் சொல்கின்றன. ரசிகர்களுக்கும் இது நன்றாக தெரியும். கோலி உலகின் தலைசிறந்த வீரர் என்பதில் எந்தவித சந்தேகமும் எனக்கு இல்லை. அதனை போன்றே ரசிகர்களும் நினைக்கின்றனர்.
தென் ஆப்பிரிக்கா போன்ற சரியில்லாத, சமமற்ற மற்றும் சீரற்ற அதிவேகமான ஆடுகளங்களில் கூட கோலி நன்றாக ஆடி சதம் விளாசினார். வேகப்பந்துவீச்சாளர்களை கண்டு அவர் அஞ்சுகிறார் என்று எப்போதும் கூற முடியாது. பவுன்சர்களை கண்டு அவர் அஞ்சுகிறார் என்றும் கூறமுடியாது. பந்துவீச்சாளர்களை கண்டு அவர் பின் வாங்குகிறார் என்றும் கூற முடியாது.
ஏனெனில் அவர் ஒரு அற்புதமான ஆட்டக்காரர். அவர் ஆடும் ஷாட்களை பாருங்கள். அதில் இருந்தே தெரிந்து விடும் அவர் பேட்டிங்கை பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் ஒரு மிகச் சிறந்த தரம் வாய்ந்த வீரர் என்று கூறியுள்ளார் ஜாவித் மியான்தத்.
மேலும் தற்போதைய கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர் கோலிதான் என்றும் ஜாவித் மியான்தத் கூறியது குறிப்பிடத்தக்கது. ஆனால் நடைபெற்று முடிந்த நியூசிலாந்து தொடரில் விராத் கோலி ரன் குவிக்க திணறியதை நாம் பார்த்தோம். இருப்பினும் இதிலிருந்து மீண்டு வந்து கோலி நிச்சயம் சிறப்பாக விளையாடுவார் என்று நம்பலாம்.