2024 உலக கிரிக்கெட்டின் அரசனாக ஐசிசி சோபர்ஸ் மணி மகுடத்தை சூடிய பும்ரா.. வரலாற்றுச் செய்யாத சாதனை

Jasprit Bumrah
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 2024 காலண்டர் வருடத்தில் அசத்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஐசிசி விருதுகளை அறிவித்து வருகிறது. அதில் ஆடவர் கிரிக்கெட்டின் உச்சபட்ச விருதான சர் கேர்பீல்ட் சோபர்ஸ் கோப்பை அதாவது 2024 சர்வதேச கிரிக்கெட்டின் சிறந்த வீரர் என்ற விருதை இந்தியாவின் ஜஸ்ப்ரித் பும்ரா வென்றுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.

இது ஒரு காலண்டர் வருடத்தில் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அசத்தும் வீரருக்கு வழங்கப்படும் மணி மகுடத்தை போன்ற கௌரவமிக்க விருதாகும். தன்னுடைய வித்தியாசமான பவுலிங் ஆக்சனை வைத்து எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் பும்ரா கடந்த வருடம் அபாரமாக விளையாடினார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகிலேயே அதிகபட்சமாக அவர் 13 போட்டிகளில் 71 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

2024ஆம் ஆண்டின் நாயகன்:

அதிலும் கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் 32 விக்கெட்டுகள் எடுத்த அவர் இந்தியாவின் வெற்றிக்கு தனி ஒருவனாக போராடியதை மறக்க முடியாது. அதனால் ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த அவர் அதிக ரேட்டிங் புள்ளிகளை (907) பெற்ற இந்திய பலராகவும் சாதனை படைத்தார். அதனால் 2024ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் என்ற ஐசிசி விருதையும் அவர் வென்றுள்ளார்.

இது போக ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ஜஸ்ப்ரித் பும்ரா 15 விக்கெட்டுகளை எடுத்து தொடர்நாயகன் விருது வென்று இந்தியா 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். அப்படி வருடம் முழுவதும் மிகச் சிறப்பாக விளையாடியதால் 2024ஆம் ஆண்டின் சிறந்த சர்வதேச வீரர் விருதை பும்ரா வென்றுள்ளார். அந்த விருதுக்கு இங்கிலாந்தின் ஜோ ரூட், ஹரி ப்ரூக், ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் ஆகியோரும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தனர்.

- Advertisement -

மகுடம் சூடிய பும்ரா:

ஆனால் அவர்களை முந்தியுள்ள ஜஸ்ப்ரித் பும்ரா சர் கேர்பீல்ட் சோபர்ஸ் விருதை வெல்லும் முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் ராகுல் டிராவிட் (2004), சச்சின் டெண்டுல்கர் (2010), ரவிச்சந்திரன் அஸ்வின் (2016), விராட் கோலி (2017, 2018) ஆகிய இந்திய பேட்ஸ்மேன்கள், ஸ்பின்னர்கள் மட்டுமே இந்த உயரிய விருதை வென்றுள்ளார்கள்.

இதையும் படிங்க: இங்கிலாந்து அணிக்கெதிரான 3-ஆவது டி20 போட்டியில் அர்ஷ்தீப் சிங் ஏன் விளையாடவில்லை? – விவரம் இதோ

இதிலிருந்தே அவர் இந்திய கிரிக்கெட் வரலாற்றின் மகத்தான பவுலராக சாதனை படைத்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. மொத்தத்தில் 2024 சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய தனித்துவமான திறமையால் ஜஸ்ப்ரித் பும்ரா அரசனாக செயல்பட்டார் என்று சொல்லலாம். அவருடைய திறமைக்கு இந்த ஐசிசி விருது மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கமாக இணைந்துள்ளது என்றால் மிகையாகாது.

Advertisement