இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ள வேளையில் இந்த தொடரில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
4 ஆவது டெஸ்ட் போட்டியில் ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாடுவார் :
அதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது வரும் ஜூலை 23ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை மான்செஸ்டர் நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாடுவாரா? என்பதே பலரது கேள்வியாகவும் உள்ளது.
ஏனெனில் இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே நிர்வாகம் வெளியிட்டிருந்த அறிவிப்பில் : பணிச்சுமையை கருத்தில் கொண்டு பும்ரா மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று கூறியிருந்தது. அதேபோன்று பயிற்சியாளர் கௌதம் கம்பீரும் பும்ராவை முக்கியமான போட்டிகளில் மட்டுமே பயன்படுத்துவோம் என்றும் அதிலும் மூன்று போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடுவார் என்பதை உறுதி செய்திருந்தார்.
இந்நிலையில் நடைபெற்று வரும் இந்த தொடரின் முதல் மற்றும் மூன்றாவது போட்டியில் விளையாடிய ஜஸ்ப்ரீத் பும்ரா அடுத்ததாக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே விளையாட இருக்கிறார். ஆனால் ஏற்கனவே இந்திய அணி இந்த தொடரில் இரண்டு போட்டிகளை இழந்து விட்டதால் நான்காவது போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) கணக்கில் சமன் செய்ய முடியும்.
அதன் காரணமாக இந்த நான்காவது முக்கியமான போட்டியில் பும்ரா விளையாட வேண்டும் என்று பல்வேறு பிரபலங்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் துணை பயிற்சியாளரான ரயான் டென் டெஸ்காத்தே கூறுகையில் : நாங்கள் மான்செஸ்டர் போட்டியில் பும்ராவை விளையாட வைக்க தான் விரும்புகிறோம். கடைசி இரண்டு போட்டியில் அவர் ஒரு போட்டியில் தான் விளையாடுவார் என்பது எங்களுக்கு தெரியும்.
ஆனால் தற்போதைய நிலைமையில் மான்செஸ்டர் போட்டியில் அவர் விளையாட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்திய அணிக்கு இந்த நான்காவது போட்டி மிகவும் முக்கியமான போட்டி என்பதனால் உலகின் நம்பர் 1 பந்துவீச்சாளரான அவரை அணியில் சேர்ப்பது எங்களுடைய விருப்பம்.
இதையும் படிங்க : டெஸ்ட் கிரிக்கெட்டில் சேவாக், வார்னர் எப்படியோ அப்படித்தானே ஜெய்ஸ்வாலும் – ஸ்டூவர்ட் பிராடு பாராட்டு
ஆனாலும் அதில் இரண்டு நிபந்தனைகள் உள்ளன. ஒன்று : நாங்கள் போட்டிக்கான சரியான காம்பினேஷனை தேர்வு செய்ய வேண்டும். அதேபோன்று மற்றொரு விடயம் : அடுத்து நடைபெற இருக்கும் ஓவல் போட்டியிலும் சரியான தரமான அணியை விளையாட வைக்க வேண்டும். இந்த இரண்டையும் முன் வைத்துத்தான் இறுதி முடிவு எடுக்கப்படும் என அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.



