நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின்னர் இந்திய அணியின் அனுபவ வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். அவர்களது இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தாலும் இளம் வீரர்கள் தங்களது இடத்திற்காக காத்திருப்பதால் இந்த முடிவு சரியான ஒன்றுதான் என்று பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் சீனியர் வீரர்களை போன்று பும்ராவும் ஓய்வை அறிவிப்பாரா? என்ற சந்தேகம் அனைவரது மத்தியிலும் இருந்து வந்தது. ஏனெனில் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக கம்பீர் நியமிக்கப்பட இருப்பது கிட்டத்தட்ட உறுதி ஆகியுள்ளது.
அப்படி அவர் பயிற்சியாளராக மாறும் பட்சத்தில் ஒவ்வொரு வடிவத்திற்கும் தனித்தனியாக அணியை உருவாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படும் வேளையில் பும்ரா டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக டி20 வகையான போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என்று பேசப்பட்டது.
இந்நிலையில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவின் போது இந்த கேள்விகளுக்கெல்லாம் பும்ரா சரியான பதிலடி கொடுத்துள்ளார். அந்த வகையில் தனது ஓய்வு குறித்து பேசிய அவர் கூறுகையில் : எனது ஓய்வு என்பது இன்னும் நீண்ட தூரத்தில் இருக்கிறது. நான் இப்பொழுதுதான் என்னுடைய கரியரை ஆரம்பித்திருக்கிறேன்.
ஓய்வுபெறும் எண்ணம் என்னிடம் சுத்தமாக கிடையாது. ஓய்வு பெறுவது என்பது மிகவும் அதிக தூரத்தில் இருப்பதாக நான் நம்புகிறேன் என்று இந்த சந்தேகங்களுக்கு எல்லாம் பும்ரா நேற்றைய நிகழ்ச்சியில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவரது இந்த கருத்தின் காரணமாக நிச்சயம் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் தொடர்ந்து இந்திய அணியுடன் பயணிப்பார் என்று தெரிகிறது.
இதையும் படிங்க : முதல் முறையா 2 – 3 முறை அழுதுட்டேன்.. விராட், ரோஹித் மாதிரி ரிட்டையர்மென்ட் எப்போது? ஜஸ்ப்ரித் பும்ரா பேட்டி
இருப்பினும் கம்பீர் பயிற்சியாளராக நியமனம் ஆகும் பட்சத்தில் இந்திய அணியில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. இவ்வேளையில் பும்ரா எப்படி இந்த மூன்று வகையான இந்திய அணியிலும் விளையாடப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.



