
இங்கிலாந்தின் லண்டன் நகரில் புகழ்பெற்ற விஸ்டன் பத்திரிக்கை தங்களுடைய 2025ஆம் ஆண்டிற்கான சர்வதேச சிறந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் பட்டியலை அறிவித்துள்ளது. அதில் 2024ஆம் ஆண்டின் சிறந்த முன்னணி சர்வதேச கிரிக்கெட் வீரராக இந்தியாவின் ஜஸ்ப்ரித் பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2024ஆம் ஆண்டு ஜஸ்ப்ரித் பும்ரா அபாரமாக விளையாடி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார்.
குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பையில் 15 விக்கெட்டுகள் எடுத்த அவர் தொடர்நாயகன் விருது வென்று இந்தியா 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டத்தை வெல்ல உதவினார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ரா 71 விக்கெட்டுகள் எடுத்தார். அதன் வாயிலாக 2024 டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற உலக சாதனையையும் அவர் படைத்தார்.
அதிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கேப்டனாக 8 விக்கெட்டுகள் எடுத்த பும்ரா தனி ஒருவனாக இந்தியாவை வெற்றி பெற வைத்ததை மறக்க முடியாது. அந்தத் தொடரில் 5 போட்டிகளில் 32 விக்கெட்டுகள் எடுத்த அவர் தனி ஒருவனாக ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக செயல்பட்டார். அத்துடன் 147 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் 20க்கும் குறைவான சராசரியில் 200 விக்கெட்டுகளை எடுத்த முதல் வீரர் என்ற உலக சாதனையையும் பும்ரா படைத்திருந்தார்.
அதன் காரணமாக 2024ஆம் ஆண்டின் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் என்ற தங்களுடைய கௌரவமிக்க பெயரை ஜஸ்ப்ரித் பும்ரா பெற்றுள்ளதாக விஸ்டன் அறிவித்துள்ளது. மேலும் 2024ஆம் ஆண்டின் நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா என்று அந்த பத்திரிகையின் நிர்வாகி லாரன்ஸ் பூத் பாராட்டியுள்ளார். அதே போல இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர வீராங்கனை ஸ்ம்ரிதி மந்தனா 2024 சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் 1659 ரன்கள் குவித்தார்.
அதன் வாயிலாக மகளிர் கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற உலக சாதனையையும் அவர் படைத்தார். அதனால் 2024ஆம் ஆண்டின் சிறந்த முன்னணி சர்வதேச வீராங்கனையாக மந்தனா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக விஸ்டன் பத்திரிகை அறிவித்துள்ளது. அந்த வகையில் ஆடவர் மற்றும் மகளிர் சர்வதேச கிரிக்கெட்டின் முக்கியமான 2 கௌரவ விஸ்டன் விருதுகளை இந்தியர்கள் வென்றுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
இதையும் படிங்க: கேப்டனாக இருந்துகிட்டு சாக்கு சொல்லாதீங்க.. நீங்க தான் அதை சொந்தமா செய்யனும்.. பண்ட்டை சாடிய ராயுடு
இது போக நிக்கோலஸ் பூரான் சிறந்த முன்னணி சர்வதேச டி20 வீரர் என்ற கருத்தை வென்றுள்ளார். கஸ் அட்கின்ஷன், ஜேமி ஸ்மித், டேன் வோரல் ஆகிய இளம் இங்கிலாந்து வீரர்கள் வளர்ந்து வரும் வீரர்கள் என்ற விஸ்டன் பத்திரிகையின் கௌரவத்தை பெற்றுள்ளார்கள். டாசன், நியூஸிலாந்தின் மிட்சேல் சான்ட்னர் ஆகியோரும் ஸ்பெஷல் விருதுகளை பெற்றுள்ளனர்.