இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி சுப்மன் கில் தலைமையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இம்முறை ரோகித் சர்மா, விராட் கோலி, ரவிசந்திரன் அஸ்வின் உள்ளிட்ட சீனியர்கள் இல்லாமல் இந்தியா விளையாட உள்ளது. அதனால் இங்கிலாந்து மண்ணில் இம்முறை இந்தியா வெல்வது கடினமாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த முறை இங்கிலாந்தில் விராட் கோலி தலைமையில் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக விளையாடியும் இந்தியாவால் வெற்றி காண முடியவில்லை.
இதற்குகிடையே புதிய கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ள சுப்மன் கில் இங்கிலாந்து மண்ணில் வெறும் 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். அந்த 3 போட்டிகளில் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் 88 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள அவர் இங்கிலாந்தில் சுமாராக விளையாடியுள்ளார். அப்படிப்பட்ட அவர் கேப்டனாக அசத்துவதற்கு சீனியர்கள் உதவ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
உதவி செய்ய மாட்டேன்:
குறிப்பாக பவுலிங் துறையில் அனுபமிக்க ஜஸ்ப்ரித் பும்ரா கேப்டனுக்கு உதவிகரமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. இந்நிலையில் சுப்மன் கில்லுக்கு கேப்டன்ஷிப் ரீதியாக பெரிதாக எந்த உதவியும் செய்யப் போவதில்லை என ஜஸ்ப்ரித் பும்ரா தெரிவித்துள்ளார். ஏனெனில் சொந்த வழியில் சிந்திக்கும் திறனைப் பெற்றுள்ள சுப்மன் கில் சுதந்திரமாக செயல்படுவதே சரியான வழி என்று அவர் கூறியுள்ளார்.
இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பும்ரா பேசியது பின்வருமாறு. “என்னுடைய அனுபவத்தில் ஒருவருக்கு நீங்கள் சுதந்திரத்தைக் கொடுத்து அவருடன் இருக்க வேண்டும். தேவைப்படும் போது அவருக்கு ஆதரவு கொடுக்க நானும் அங்கே இருப்பேன். மற்றபடி எதற்காகவும் அவருடன் சேர்ந்து குதிக்க விரும்பவில்லை. இக்கட்டான சூழ்நிலைகளைப் பார்த்தால் அவரிடம் அமைதியாக சில வார்த்தைகளை சொல்ல முடியும்”
சுதந்திரம் முக்கியம்:
“ஒருவர் சுதந்திரமாக இருப்பதையே நான் விரும்புகிறேன். ஒருவர் தாம் சிந்திக்கும் விஷயங்களை ஒருவர் சுதந்திரமாக செயல்படுத்த வேண்டும். சுப்மன் கில் தனிப்பட்ட முறையில் செயல்படக்கூடிய நபர். பெரியளவில் பேசாத அவர் பெரிய மீட்டிங்கையும் நடத்தவில்லை. அவர் தாம் விரும்பும் வீரர்களிடம் நேருக்கு நேராக பேசக்கூடியவர். ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக இருந்த அனுபவத்தைக் கொண்டுள்ள அவர் என்னிடம் வந்தால் உதவி செய்ய தயாராக இருப்பேன்”
இதையும் படிங்க: ஐபிஎல்லயே பாத்தேன்.. இந்த பேட்டிங் குறைபாட்டை சரிசெய்யலன்னா கில் கஷ்டப்படுவாரு.. எச்சரித்த நிக் நைட்
“தற்போது அவர் இந்திய கிரிக்கெட்டின் சுவாரசியமான வித்தியாசமான நிலையை கையாள உள்ளார். சில வருடங்களுக்கு முன்பாக எங்களுடைய அணி வித்தியாசமாக இருந்தது. ஆனால் தற்போது வருங்காலத்தை நோக்கி நகர்கிறது. இது சுவாரசியமான நேரங்களாகும். இந்த நேரத்தில் நீங்கள் நிறைய அமைதி மற்றும் பொறுமையுடன் இருக்க வேண்டும்” எனக் கூறினார்.



