இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா தற்சமயத்தில் உலகின் நம்பர் ஒன் பௌலராக ஜொலிக்க வருகிறார். தனித்துவமான பவுலிங் ஆக்சனை வைத்து துல்லியமான பந்துகளை வீசும் அவர் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்ற அவர் இந்தியா சாம்பியன் பட்டத்தை முத்தமிட உதவினார்.
கடந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு அதனுடைய சொந்த மண்ணில் சிம்ம சொப்பனமாக செயல்பட்ட பும்ரா இந்தியாவின் வெற்றிக்கு தனி ஒருவனாக போராடினார். முன்னதாக கிரிக்கெட்டில் விக்கெட்டை எடுக்கும் போதெல்லாம் பவுலர்கள் அதை வித்தியாசமாக கொண்டாடுவது வழக்கமாகும். சொல்லப்போனால் சாதாரண பவுலர்கள் கூட விக்கெட்டுகளை எடுத்தால் விதவிதமாக ஆக்ரோசமாகக் கொண்டாடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
கோமாளியாக விரும்பல:
ஆனால் உலகின் நம்பர் ஒன் பவுலராக ஜொலிக்கும் பும்ரா விக்கெட்டை எடுக்கும் பெரும்பாலான சமயங்களில் அதை அமைதியாக கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் கடினமாக உழைத்து எடுக்கும் விக்கெட்டை ஏன் நீங்கள் ஆக்ரோஷமாக கொண்டாடுவதில்லை? என்று அவரிடம் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் தனது யூடியூப் பக்கத்தில் கேட்டார். அதற்கு விக்கெட்டை எடுத்து விட்டு கோமாளி போல கொண்டாட விரும்பவில்லை என்று ஜஸ்ப்ரித் பும்ரா கொடுத்த பதில் பின்வருமாறு.
“நான் வெற்றிக்காக விளையாடுகிறேன். நானும் என்னுடைய போட்டித் தன்மையை கொண்டுள்ளேன். ஆனால் அதற்காக நான் எல்லைக்கோட்டை தாண்ட விரும்பவில்லை. இங்கே அனைவரும் குறிப்பிட்ட வழியில் கிரிக்கெட்டை விளையாடுவதைப் போல நானும் விளையாடுகிறேன். ஆம் நீங்கள் போட்டித் தன்மையுடன் இருந்து உங்களுடைய சிறந்த செயல்பாடுகளைக் கொடுக்க வேண்டும்”
கோலி ரசிகர்கள் கோபம்:
“அதற்காக நீங்கள் கோமாளியாக இருக்கக்கூடாது. அப்படி நான் இருக்க விரும்பவில்லை. பவுலர்கள் விக்கெட்டை எடுத்த பின் பேட்ஸ்மேன்களிடம் மிரட்டுவது போல் கொண்டாடுவதைப் பார்த்துள்ளேன். நானும் என்னுடைய கேரியரைத் துவங்கிய போது அதை முயற்சித்தேன். ஆனால் அது எனக்கு வேலை செய்யவில்லை. எனக்குள்ளும் ஆக்ரோஷம் இருக்கிறது. ஆனால் அதற்காக எல்லை மீறி கொண்டாடும் போது என்னால் சிறப்பாக பவுலிங் செய்ய முடிவதில்லை”
இதையும் படிங்க: பேட்டிங் ஆவெரேஜ் 46க்கு சரிந்தாலும்.. விராட் கோலி அந்த லிஸ்ட்ல இருப்பாரு.. பாண்டிங் கருத்து
“எனவே அது சிறந்த வழியல்ல என்பதை உணர்ந்த நான் என்னுடைய ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்திக் கொண்டது சிறப்பாக பவுலிங் செய்ய உதவி செய்கிறது” என்று கூறினார். இதைப் பார்க்கும் விராட் கோலி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள். ஏனெனில் விராட் கோலி தான் விக்கெட் விழும் போதெல்லாம் அதை தாமே எடுத்தது போல் பவுலரை விட வெறித்தனமாக பேட்ஸ்மேன் முகத்துக்கு முன் சென்று கொண்டாடுவதை வாடிக்கையாக வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



