இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு எதிரான சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பியது. அதைத் தொடர்ந்து வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ள அந்தத் தொடர் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கியது.
அதற்கு முன்பாக இந்திய வீரர்கள் 2024 துலீப் கோப்பையில் விளையாட உள்ளனர். அதில் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோருக்கு மட்டும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த இருவரில் விராட் மற்றும் ரோஹித் ஆகியோர் வங்கதேச டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளனர். ஆனால் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு மட்டும் ஸ்பெஷலாக வங்கதேச டெஸ்ட் தொடரில் ஓய்வு கொடுக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.
120% முக்கியம்:
ஏனெனில் தனித்துவமான பவுலிங் ஆக்சனை கொண்ட அவர் 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியாவில் வெல்ல தொடர்நாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றினார். எனவே தற்சமயத்தில் விராட் மற்றும் ரோஹித்தை விட பும்ரா இந்தியாவின் விலைமதிப்பு மிக்க வீரராக கருதப்படுகிறார். அந்த நிலையில் வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
அந்தத் தொடர் தான் அடுத்ததாக நடைபெறும் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து டெஸ்ட் தொடர்களை விட இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானதாகும். எனவே அதில் ஜஸ்ப்ரித் பும்ரா எவ்வித காயமும் இல்லாமல் 120% விளையாட வேண்டுமென பிசிசிஐ விரும்புகிறது. அதனால் வங்கதேச தொடரில் அர்ஷ்தீப் சிங் அல்லது கலீல் அஹ்மத் ஆகியோர் அறிமுகமாக விளையாட வாய்ப்புள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இது பற்றி பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ நிர்வாகி பேசியது பின்வருமாறு. “தம்முடைய உடல் எந்தளவுக்கு இருக்கிறது என்பது பும்ராவுக்கு தான் தெரியும். எனவே அவர் விரும்பினால் மட்டும் வங்கதேச டெஸ்ட் தொடரில் விளையாடலாம். இதற்கான அர்த்தம் என்னவெனில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 5 டெஸ்ட் போட்டிகளில் ஜஸ்ப்ரித் பும்ரா 120% ஃபிட்டாகி இந்தியாவுக்கு விளையாட வேண்டும் என்று தேர்வுக்குழு விரும்புகிறது”
இதையும் படிங்க: கெளதம் கம்பீருக்கு ஆர்டர் போட நான் யார்? இந்திய அணியில் ஸ்ஃப்லிட் கோச்சிங் பற்றி ஜெய் ஷா பேட்டி
“அதற்கு முன்பாக இந்தியா தங்களது சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. வேண்டுமானால் அதில் பும்ரா கணிசமான போட்டிகளில் விளையாடுவார்” என்று கூறினார். அது போன்ற சூழ்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பையில் 17 விக்கெட் எடுத்து பும்ராவுக்கு நிகராக வெற்றியில் பங்காற்றிய அர்ஷ்தீப் சிங் வங்கதேச தொடரில் அறிமுகமாக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.



