904 பாய்ண்ட்ஸ்.. அஸ்வினின் ஆல் டைம் சாதனையை சமன் செய்த ஜஸ்ப்ரித் பும்ரா.. கபில் தேவ் கூட செய்யாத சாதனை

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா தற்சமயத்தில் மிகச்சிறந்த பவுலராக செயல்பட்டு வருகிறார். 2024 டி20 உலகக் கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்ற அவர் இந்தியா 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். அதே போல தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய தொடரில் இதுவரை அவர் 3 போட்டிகளில் 21* விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

அதையும் சேர்த்து ஆஸ்திரேலிய மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த ஆசிய வீரர் என்ற கபில் தேவ் சாதனையை அவர் கடந்த போட்டியில் உடைத்திருந்தார். இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் டாப் 10 பவுலர்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலிய தொடரில் அசத்தி வரும் பும்ரா மொத்தம் 904 ரேட்டிங் புள்ளிகளை பெற்றுள்ளார்.

- Advertisement -

பும்ரா புதிய உச்சம்:

அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகின் நம்பர் ஒன் பவுலராக அவர் தொடர்ந்து ஜொலித்து வருகிறார். அதை விட முக்கியமான விஷயம் என்னவெனில் ஒட்டுமொத்த வரலாற்றில் ஐசிசி டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில் ஒரு இந்திய வீரர் பெற்ற அதிகப்படியான ரேட்டிங் புள்ளிகளை பும்ராவும் பெற்றுள்ளார். இதற்கு முன் சமீபத்தில் ஓய்வு பெற்ற ரவிச்சந்திரன் அஸ்வின் 2016ஆம் ஆண்டு 904 புள்ளிகளைப் பெற்று உலகின் நம்பர் ஒன் பவுலர் இடத்தைப் பிடித்தார்.

தற்போது 904 புள்ளிகளை பெற்றுள்ள ஜஸ்ப்ரித் பும்ரா ஐசிசி டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில் அதிக ரேட்டிங் புள்ளிகளை பெற்ற இந்திய பவுலர் என்ற அஸ்வினின் ஆல் டைம் சாதனையை சமன் செய்துள்ளார். சொல்லப்போனால் ஜஸ்ப்ரித் பும்ரா வேகப்பந்து வீச்சாளராக இந்த உச்சத்தை தொட்டுள்ளார். அதன் வாயிலாக ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 900 ரேட்டிங் புள்ளிகளை தொட்ட முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

- Advertisement -

அபார சாதனை:

இதற்கு முன் கபில் தேவ், ஜஹீர் கான் போன்ற ஜாம்பவான் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் கூட 900 ரேட்டிங் புள்ளிகளை கடந்ததில்லை. அதிகபட்சமாக கபில் தேவ் 877 புள்ளிகளை பெற்றுள்ளார். மற்றபடி தற்போதைய தரவரிசையில் ஓய்வு பெற்ற அஸ்வின் 5வது இடத்தில் இன்னும் நீடிக்கிறார். ரவீந்திர ஜடேஜா 10வது இடத்திற்கு சரிந்துள்ளார்.

இதையும் படிங்க: பும்ராவிடம் நான் இதை மட்டும் தான் சொல்ல விரும்புறேன்.. ஆஹா ஓஹோன்னு பாராட்டி தள்ளிய – ஆரோன் பின்ச்

டாப் 10 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் ஜெய்ஸ்வால் மட்டுமே 5வது இடத்தில் இருக்கிறார். டாப் 10 ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ஜடேஜா தொடர்ந்து நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். ஓய்வு பெற்ற அஸ்வின் 3வது இடத்தில் உள்ளார். அணிகள் தரவரிசையில் ஆஸ்திரேலியா முதலிடத்தில் இருக்கும் நிலையில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது.

Advertisement