இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. லீட்ஸ் மைதானத்தில் ஜூன் 20ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 471 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 101, கேப்டன் சுப்மன் கில் 147, ரிஷப் பண்ட் 134 ரன்களை எடுத்தார்கள்.
இங்கிலாந்து அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் டாங் தலா 4 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து கடுமையாக போராடியும் 465 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு ஓலி போப் சதத்தை அடித்து 106 ரன்களை அடித்து அசத்தினார். அவருடன் சேர்ந்து விளையாடிய பென் டக்கெட் 62 ரன்களில் அவுட்டானார்.
6 ரன்கள் லீட்:
மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடிய ஹாரி ப்ரூக் சதத்தை தவற விட்டு 99 ரன்னில் அவுட்டானார். லோயர் மிடில் ஆர்டரில் ஜேமி ஸ்மித் 40, கிறிஸ் ஓக்ஸ் 38 ரன்களை ஓரளவு கை கொடுத்தனர். இந்தியாவுக்கு ஜஸ்பிரித் பும்ரா 5, ப்ரசித் கிருஷ்ணா 3, முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
குறிப்பாக கடைசி நேரத்தில் இங்கிலாந்து டெய்ல் எண்டர் பேட்ஸ்மேன்கள் இந்தியாவுக்கு தொல்லைக் கொடுத்தனர். அதனால் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்று விடுமோ என்று இந்திய ரசிகர்கள் கலக்கத்தில் இருந்தனர். அப்போது கிறிஸ் ஓக்ஸ், ஜோஸ் டாங் ஆகியோரை கிளீன் போல்ட்டாக்கிய பும்ரா இந்தியாவுக்கு 6 ரன்கள் முன்னிலையைப் பெற்றுக் கொடுத்தார். இதையும் சேர்த்து தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா எனப்படும் சேனா நாடுகளில் பும்ரா 150 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
வெளிநாட்டில் கில்லி:
இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சவாலான சேனா நாடுகளில் 150 விக்கெட்டுகள் எடுத்த முதல் ஆசிய பவுலர் என்ற வரலாற்றுச் சாதனையை பும்ரா படைத்துள்ளார். இதற்கு முன் பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் 140 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனை. இது போக சேனா நாடுகளில் பும்ரா 10வது முறையாக ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
இதையும் படிங்க: கபில் தேவ் கூட நான் விளையாடி இருக்கேன்.. ஆனாலும் பும்ரா தான் “கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம்” – ரவி சாஸ்திரி பேட்டி
அதன் வாயிலாக சேனா நாடுகளில் 2வது அதிக முறை 5 விக்கட்டுகளை எடுத்த ஆசிய பவுலர் என்ற இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் வாழ்நாள் சாதனையையும் பும்ரா சமன் செய்துள்ளார். இதற்கு முன் முரளிதரனும் 10 முறை 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அந்தப் பட்டியலில் வாசிம் அக்ரம் இன்னும் (11 முறை) முதலிடத்தில் இருக்கிறார். மொத்தத்தில் வெளிநாட்டு மண்ணில் கில்லியாக செயல்பட்டு வரும் பும்ரா தன்னை உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலர் என்பதை நிரூபித்து வருகிறார்.



