இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் ஆண்டர்சன் – டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஜூன் 20ஆம் தேதி துவங்கிய அந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. இதைத்தொடர்ந்து நடைபெறும் இரண்டாவது போட்டியில் பணிச்சுமையை நிர்வகிக்கும் நோக்கத்தில் பும்ரா ஓய்வெடுக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பவுலராக ஜொலிக்கும் அவர் கடந்த ஆஸ்திரேலிய தொடரில் தனி ஒருவனாக இந்தியாவின் வெற்றிக்குப் போராடினார். அதனாலேயே கடைசி போட்டியில் காயத்தையும் சந்தித்த அவர் தற்போது மீண்டும் குணமடைந்து விளையாடி வருகிறார். எனவே இங்கிலாந்திலும் 5 போட்டிகளில் விளையாடினால் அவர் காயமடைய அதிக வாய்ப்புள்ளது.
பாவங்க பும்ரா:
அதன் காரணமாக பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தொடர் துவங்குவதற்கு முன்பாக அறிவித்து விட்டார். அதன் காரணமாக 2வது போட்டியில் இந்தியா கண்டிப்பாக திணறப்போகிறது என்று ரசிகர்கள் கவலையில் ஆண்டுள்ளனர். ஏனெனில் முதல் போட்டியிலேயே அவரைத் தவிர்த்து மற்ற பவுலர்கள் மிகவும் சுமாராக பவுலிங் செய்து இந்தியாவின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தனர்.
முன்னதாக ஜிம்பாப்வே, வங்கதேசம் போன்ற கத்துக்குட்டிகளுக்கு எதிரான சாதாரண தொடர்களில் பும்ரா பெரும்பாலும் விளையாடாமல் ஓய்வெடுக்கிறார். அதனால் இந்த முக்கியமான தொடரில் இந்தியாவுக்காக பும்ரா 5 போட்டிகளிலும் விளையாடினால் என்ன? என்று சில ரசிகர்கள் விமர்சிக்கிறார்கள். ஆனால் கடந்த 2024 ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஜஸ்ப்ரித் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓவர்களை வீசிய வேகப்பந்து பயிற்சியாளராக முதலிடம் பிடிக்கிறார்.
உறிஞ்சப்படும் ஹீரோ:
2024 முதல் இதுவரை அவர் 410.4 ஓவர்களை வீசியுள்ளார். அவரைத் தவிர்த்து உலகில் மற்ற யாருமே 400 ஓவர்களைக் கூட வீசவில்லை. அவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் மிட்சேல் ஸ்டார்க் 362.3, பட் கமின்ஸ் 359.1, இந்தியாவின் சிராஜ் 355.3 ஓவர்களை 2, 3, 4வது இடங்களில் உள்ளார்கள். சொல்லப்போனால் அதே காலகட்டங்களில் அதிக ஓவர்களை வீசிய இந்திய பவுலராகவும் பும்ரா முதலிடத்தில் இருக்கிறார்.
இதையும் படிங்க: பலி கிடாவான கோன்ஸ்டஸ்.. ஆம்ப்ரோஸ் இல்ல வெட்டிப்பேச்சு என கலாய்த்த ஹீலி முகத்தில் கரியை பூசிய ஜோசப்
அவருக்கு அடுத்தபடியாக குறைந்த தூரம் ஓடிவந்து பௌலிங் செய்யக்கூடிய ஸ்பின்னரான ரவீந்திர ஜடேஜா (400.1 ஓவர்கள்) 2வது இடத்தில் உள்ளார். அதே காலகட்டங்களில் உலகிலேயே அதிகபட்சமாக பும்ரா 78 விக்கெட்டுகளை எடுத்து முழு மூச்சுடன் இந்தியாவுக்காக போராடியுள்ளார். அதனால் பாவம் என்று சொல்லத் தோன்ற வைக்கும் இந்தியாவின் ஹீரோ பும்ரா காயத்தைத் தவிர்க்க ஓய்வெடுக்க தகுதியானவராகவே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



