தீப்தி சர்மாவை விமர்சித்த மைக்கேல் வாகன் உள்ளிட்ட அனைவருக்கும் ஆஸி ஜாம்பவான் சிறப்பான பதிலடி

Vaughan
- Advertisement -

உலகப் புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் கடைசி நேரத்தில் வெற்றிக்கு போராடிய இங்கிலாந்து வீராங்கனை சார்லி டீன் பந்து வீசுவதற்கு முன்பாகவே எதிர்ப்புறமிருந்த வெள்ளை கோட்டை தாண்டியதால் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா ரன் அவுட் செய்தது உலக அளவில் பெரிய சர்ச்சையையும் விவாதங்களையும் எழுப்பியுள்ளது. ஆரம்ப காலம் முதலே நடைமுறையில் இருந்து வரும் இந்த வகையான அவுட்டை ஒரு முறை இந்திய முன்னாள் வீரர் வினோ மன்கட் செய்ததிலிருந்து பிரபலமாகி அவரது பெயருடன் அழைக்கப்பட்டதுடன் நேர்மைக்கு புறம்பானதாக பார்க்கப்பட்டது.

ஏனெனில் பரபரப்பாக நடைபெறும் போட்டியில் சிங்கிள் எடுப்பதற்காக தன்னுடைய பார்ட்னர் பேட்ஸ்மேன் மீது கவனத்தை வைக்கும் எதிர்புற பேட்ஸ்மேன் பந்து வீசுவதற்கு முன்பாகவே ஒருசில அடிகள் வெள்ளை கோட்டை தாண்டி விடுகிறார்கள். இருப்பினும் கிரிக்கெட்டில் பேட்டிங் பவுலிங் ஆகிய இரண்டுக்கும் விதிமுறைகள் சமம் என்ற நிலையில் பவுலர்கள் மட்டும் ஒரு இன்ச் காலை வெளியே வைத்தால் உடனடியாக நோ-பால் வழங்கி தண்டனையாக ஃப்ரீ ஹிட் கொடுக்கப்படுகிறது. ஆனால் பேட்ஸ்மேன்கள் மட்டும் ஏறக்குறைய அனைத்து பந்துகளிலும் வெள்ளைக் கோட்டை தாண்டுவது நியாயமா என்ற கோட்பாட்டுடன் தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஷ்வின் ஐபிஎல் தொடரில் பட்லரை மன்கட் செய்தார்.

- Advertisement -

எச்சரிக்கை கொடுங்க:
அதுபோக யார் என்ன சொல்வார்கள் என்பதை பற்றி கவலைப்படாமல் உலகின் அனைத்து பவுலர்களும் இதை தைரியமாக செய்ய வேண்டும் என்று யூடியூப் பக்கத்தில் பேசிய அவர் புரட்சியை எழுப்பினார். அவரது கோரிக்கையில் நியாயம் இருந்ததை புரிந்துகொண்ட கிரிக்கெட் விதிமுறைகளை நிர்வகிக்கும் லண்டனின் எம்சிசி அமைப்பு மன்கட் அவுட்டை நேர்மைக்குப் புறம்பான பிரிவிலிருந்து ரன் அவுட் பிரிவுக்கு மாற்றி அறிவிப்பு வெளியிட்டது. அதை கடந்த வாரம் ஐசிசியும் ஏற்றுக்கொண்ட நிலையில் அதை பற்றியெல்லாம் கவலைப்படாத நாசர் ஹுசைன், ஸ்டூவர்ட் பிராட் போன்ற முன்னாள் இந்நாள் இங்கிலாந்து வீரர்களும் ரசிகர்களும் தீப்தி சர்மா நேர்மைக்கு புறம்பாக செயல்பட்டதாக கடுமையாக விமர்சித்தனர்.

அதே சமயம் எம்சிசி மற்றும் ஐசிசி அங்கீகரித்த விதிமுறைக்கு உட்பட்டு தீப்தி சர்மா செயல்பட்டத்தில் தவறில்லை ஆனால் அவ்வாறு அவுட் செய்வதற்கு முன்பாக ஒரு எச்சரிக்கை கொடுத்திருக்கலாமே என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹீதர் நைட் அதிருப்தியை வெளிப்படுத்தினார். அதை ஆதரித்த முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் சார்லி டீனுக்கு தீப்தி சர்மா வார்னிங் கொடுத்தாரா என்பதை பற்றி நாம் ஏன் அம்பயரிடம் கேட்கக்கூடாது என்று கேள்வி எழுப்பினார்.

- Advertisement -

அதுபோக தனது சொந்த கருத்தை தனது டுவிட்டரில் பதிவிட்டு அவர் கூறியது பின்வருமாறு. “மன்கட் என்பது விதிமுறையில் உள்ளது. ஆனால் அதுவே யுக்தியாக மாறிவிடக்கூடாது. மேலும் அதுபோன்ற யுக்தியைப் பயன்படுத்தி அவுட் செய்யலாம் என்று பயிற்சியளித்து இளம் குழந்தைகளை நீங்கள் வளர்க்கக் கூடாது. அதேசமயம் பேட்ஸ்மேன்கள் வெள்ளை கோட்டுக்கு உள்ளேயே இருப்பதற்கு பயிற்சிகளை எடுக்க வேண்டும். ஆனால் நேற்றைய போட்டி உட்பட மன்கட் செய்து வெற்றி பெறுவது துர்நாற்றம் வீசுவதற்கு சமம்” என்று கூறினார்.

அதை பார்த்த முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லஸ்பி மன்கட் ரன் அவுட் செய்வதற்கு முன்பாக எதிர்புறம் இருக்கும் பேட்ஸ்மேனுக்கு பவுலர் எச்சரிக்கை கொடுக்க வேண்டும் என எந்த விதிமுறைகளும் குறிப்பிடவில்லை என்று நெத்தியடி பதிலை கொடுத்தார். இது பற்றி அவர் கூறியது பின்வருமாறு. “மன்னிக்கவும். நேர்மையை காட்டுவதற்காக கட்டாயம் வார்னிங் கொடுக்க வேண்டும் என எந்த விதிமுறையும் சொல்லவில்லை. அதனால் விதிமுறையை பின்பற்றி நீங்கள் விளையாடினால் விதிமுறைகள் உங்களை பத்திரமாக கவனித்துக் கொள்ளும்” என்று கூறினார்.

அவர் கூறுவது போல பந்துவீச்சாளர் முதல் முறையாக கோட்டுக்கு வெளியே காலை வைத்து பந்து வீசினால் அம்பயர் எச்சரிக்கை கொடுக்காமல் நேரடியாக நோ பால் கொடுத்து தண்டனையாக பிரீ ஹிட் கொடுக்கிறார். அதனால் பேட்ஸ்மேனும் வெள்ளை கோட்டுக்கு வெளியே காலை வைக்கும் போது முன்னெச்சரிக்கையின்றி அவுட் செய்வதில் எந்த தவறுமில்லை அவ்வாறு விதியும் கூறவில்லை.

Advertisement