
நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியானது நேற்று கௌகாத்தி நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரியான் பிராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. அந்த வகையில் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட் வித்யாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.
இந்த போட்டியில் முதலில் விளையாடிய சென்னை அணி ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்களை மட்டுமே குவித்தது. இந்த போட்டியில் சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக ஜெமி ஓவர்டன் 36 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 43 ரன்கள் குவித்தார். அவரை தவிர வேறு எந்த ஒரு சிஎஸ்கே வீரரும் 20 ரன்களை கூட எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் அணி 128 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வேளையில் துவக்கத்திலிருந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 12.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் குவித்து 8 வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது சிஎஸ்கே அணி சார்பாக விளையாடிய வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான ஜேமி ஓவர்டன் 36 பந்துகளை சந்தித்து 43 ரன்களை அடித்ததன் மூலம் எம்.எஸ் தோனியின் மாபெரும் சாதனை ஒன்றினை தகர்த்து அசத்தியுள்ளார். அந்த வகையில் ஜேமி ஓவர்டன் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இதுவரை சிஎஸ்கே அணிக்காக எட்டாவது அல்லது அதற்கு கீழ் வரிசையில் பேட்டிங் இறங்கி அதிக ரன்களை குவித்த வீரராக எம்.எஸ் தோனி முதலிடத்தில் இருந்தார்.
இதையும் படிங்க : 14 போட்டியிலும் கண்டிப்பா ஆடுவ.. இதை மட்டும் பண்ணு.. வைபவ் சூர்யவன்ஷிக்கு – ரியான் பாரக் கொடுத்த அட்வைஸ்
கடந்த 2024-ஆம் ஆண்டு விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் அவர் எட்டாவது வீரராக கிளமிறங்கி 37 ரன்கள் குவித்திருந்தார். இவ்வேளையில் அவரது இந்த சாதனையை முறியடித்துள்ள ஓவர்டன் எட்டாவது இடத்தில் களமிறங்கி 43 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.