இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி கடந்த 2008-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 123 போட்டிகளில் விளையாடி 30 சதம் மற்றும் 31 அரைசதம் என 9230 ரன்கள் குவித்துள்ளார். எதிர்வரும் இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக டெஸ்ட் போட்டிகளில் இருந்து திடீரென ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது.
சச்சினை விட விராட் கோலி தான் கடினமான பேட்ஸ்மேன் : ஜேம்ஸ் ஆண்டர்சன்
ஏனெனில் இன்னும் 770 ரன்கள் குவித்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000 ரன்களை குவித்த வீரராக மாறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அதற்கு முன்னதாகவே விராட் கோலி ஓய்வை அறிவித்து ஏமாற்றம் அளித்திருந்தார். அதுமட்டும் இன்றி தற்போது 36 வயதாகும் அவரால் குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாவது விளையாட முடியும் என்றாலும் முன்கூட்டியே அவர் ஓய்வை அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
எதிர்வரும் இந்த இங்கிலாந்து தொடரில் விராட் கோலி போன்ற அனுபவ வீரர் இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் விமர்சகர்கள் பலரும் இந்திய அணியை எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சச்சினை விட விராட் கோலிக்கு எதிராக பந்துவீசவே அதிக சிரமப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : டெஸ்ட் போட்டிகளின் போது முன்னாள் ஜாம்பவான சச்சின் டெண்டுல்கரை விட விராட் கோலிக்கு எதிராக பந்துவீசும் போது நான் சிரமத்தை சந்தித்துள்ளேன். சச்சின், விராட் கோலி என இருவரையுமே நான் பலமுறை வீழ்த்தி இருந்தாலும் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்துவது என்பது சவாலான ஒன்று.
ஏனெனில் தனக்கென தனி பேட்டிங் டெக்னிக்கை வைத்திருக்கும் கோலி கிரீஸ்களை நன்றாக பயன்படுத்துவது மட்டுமின்றி களத்தில் உள்ள வியூகங்களையும் சரியாக கணிக்க கூடியவர். அதனால் அவருக்கு எதிராக பந்துவீச நான் சிரமப்பட்டுள்ளேன் என பேசியுள்ளார். விராட் கோலி ஆண்டர்சனுக்கு எதிராக மட்டும் 36 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 43 ரன்கள் சராசரியுடன் 305 ரன்கள் குவித்துள்ளார்.
இதையும் படிங்க : 52 ரன்கள் பாக்கி.. இங்கிலாந்து தொடரின் முதல் போட்டியிலேயே சாதனை படைக்க காத்திருக்கும் – ரிஷப் பண்ட்
அதேவேளையில் ஆண்டர்சனும் விராட் கோலியின் விக்கெட்டை 7 முறை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் போட்டிகளில் நான்காவது இடத்தில் களமிறங்கி நங்கூரம் போல் விளையாடி வந்த விராட் கோலி இந்திய அணிக்கு பல போட்டிகளில் வெற்றி பெற்று தந்திருந்த வேளையில் தற்போது அவர் இல்லாமல் இந்திய அணி எவ்வாறு இந்த இங்கிலாந்து தொடரை சமாளிக்கப்போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



