- Advertisement -
உலக கிரிக்கெட்

அனைவரும் வியக்கும் வகையில் மீண்டும் உலகசாதனை படைத்த ஆண்டர்சன் – முரளியை முந்துவரா?

உலகின் முதல் டெஸ்ட் சாம்பியனாக விளங்கும் நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து தனது சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் ஜோ ரூட் அசத்தல் சதத்தால் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அந்த அணி 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றது. அதனால் புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் தனது டெஸ்ட் பயணத்தை வெற்றியுடன் துவக்கிய அந்த அணி ஜூன் 10-ஆம் தேதி ட்ரெண்ட் பிரிட்ஜ் நகரில் துவங்கிய 2-வது போட்டியில் களமிறங்கியது.

அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அற்புதமாக பேட்டிங் செய்து 553 ரன்கள் குவித்து அசத்தியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக மிடில் ஆர்டரில் டார்ல் மிட்சேல் இரட்டை சதத்தை நழுவ விட்டாலும் 190 ரன்கள் விளாசி அசத்தினார். அவருடன் பேட்டிங் செய்த டாம் ப்ளன்டல் சதமடித்து 106 ரன்கள் குவித்தார். அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்தும் நியூசிலாந்துக்கு கடும் சவாலை கொடுக்கும் வகையில் முதல் இன்னிங்சில் 539 ரன்கள் குவித்து அசத்தியது.

- Advertisement -

அசத்தும் ஜோ ரூட்:
அந்த அணிக்கு அதிகபட்சமாக 3-வது இடத்தில் களமிறங்கிய ஓலி போப் சதமடித்து 145 ரன்களில் ஆட்டமிழந்தார். அவருடன் முரட்டுத்தனமான பார்மில் ரன் மழை பொழிந்து வரும் முன்னாள் கேப்டன் ஜோ ரூட் மீண்டும் இந்த போட்டியில் 26 பவுண்டரி 1 சிக்சருடன் சதமடித்து 176 ரன்கள் குவித்தார். கடந்த போட்டியில் 10000 ரன்களை கடந்த 2-வது இங்கிலாந்து பேட்ஸ்மேனாக சாதனை படைத்த அவர் இப்போட்டியில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த 12-ஆவது பேட்ஸ்மேன் என்ற இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கரை முந்தி புதிய சாதனையும் படைத்தார். நியூசிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக நட்சத்திரம் டிரென்ட் போல்ட் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதை தொடர்ந்து 14 ரன்கள் முன்னிலை பெற்ற நியூசிலாந்து 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 224/7 என்ற நிலைமையுடன் தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது. அந்த அணிக்கு வில் எங் 56, டேவோன் கான்வே 52 ரன்கள் எடுத்த நிலையில் தற்போது களத்தில் நம்பிக்கை நட்சத்திரம் டார்ல் மிட்சேல் 32* ரன்களுடன் உள்ளார். தற்போதைய நிலைமையில் ஒருநாள் மட்டுமே எஞ்சியிருப்பதால் இப்போட்டி டிராவில் முடிவடைவதற்கே அதிக வாய்ப்புள்ளது.

- Advertisement -

ஆண்டர்சன் உலகசாதனை:
முன்னதாக இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சு கூட்டணியான ஜேம்ஸ் ஆண்டர்சன் – ஸ்டுவர்ட் ப்ராட் ஆகியோர் கடந்த ஜனவரியில் பெற்ற ஆஷஸ் தோல்வியால் பிப்ரவரியில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அதிரடியாக நீக்கப்பட்டனர். ஆனால் புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் புதிய பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலம் பதவியேற்ற கையுடன் முதல் வேலையாக அவர்களை மீண்டும் இந்த நியூசிலாந்து தொடரில் விளையாடுவதற்காக ஏற்பாடுகளை செய்தனர். அதில் 39 வயதை கடந்துவிட்ட ஜேம்ஸ் ஆண்டர்சன் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வேகப்பந்து வீச்சாளராக உலக சாதனை படைத்துள்ளது ரசிகர்க்ள் அறிவார்கள்.

அப்படிப்பட்ட நிலைமையில் இந்த தொடரிலும் 40 வயதை நெருங்கினாலும் அந்த சோர்வு பந்துவீச்சில் தெரியாத அளவுக்கு இளம் வீரரை போல் அட்டகாசமாக பந்துவீசும் அவர் இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்கள் உட்பட இதுவரை 4 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இந்த 4 விக்கெட்களையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 650* விக்கெட்டுகள் எடுத்த முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற புதிய உலக சாதனையை அவர் படைத்துள்ளார்.

- Advertisement -

மேலும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த 3-வது பந்துவீச்சாளராகவும் ஏற்கனவே இந்திய ஜாம்பவான் அனில் கும்ப்ளேவை முந்தி சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல் இதோ:
1. முத்தையா முரளிதரன் : 800
2. ஷேன் வார்னே : 708
3. ஜேம்ஸ் ஆண்டர்சன் : 650*
4. அனில் கும்ப்ளே : 619
5. கிளென் மெக்ராத் : 563

பொதுவாக நிறைய வீரர்கள் 35 வயதைக் கடந்து விட்டால் வயதின் காரணமாக சுமாராக செயல்படுவார்கள். ஆனால் 35 வயதுக்கு பின் பழைய சரக்குக்கு ருசி அதிகம் என்பது போல வயது ஆகஆக விக்கெட்டுகளை மலைபோல் குவித்து வரும் இவர் நிறைய உலக சாதனைகளை அசால்டாக படைத்து வருகிறார்.

இதையும் படிங்க : INDvsRSA : இன்றைய 3 ஆவது போட்டியில் இந்திய அணியில் நிச்சயம் இந்த ஒரு மாற்றம் இருக்கும் – வெளியான தகவல்

தற்போது 40 வயதை கடந்து வரும் இவர் கொஞ்சம் கூட சோடை போகாமல் பந்து வீசுவதால் 2-வது இடத்தில் இருக்கும் மற்றொரு ஷேன் வார்னேவை முந்துவது உறுதியாகியுள்ளது. இருப்பினும் 800 விக்கெட்டுகள் எடுத்துள்ள முரளிதரனை முந்துவது மிகப்பெரிய சவால் என்பதால் அதையும் முறியடிப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

- Advertisement -
Published by