
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் கே.எல். ராகுல் சமீப காலங்களாக தடுமாற்றமாக செயல்பட்டு வருகிறார். அதனால் ஏற்கனவே இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் அவர் தன்னுடைய நிலையான இடத்தை இழந்துள்ளார். அதே போல டெஸ்ட் அணியிலும் சர்பராஸ் கான், துருவ் ஜுரேல் போன்ற வீரர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக விளையாடி அவருக்கு போட்டியாக வந்துள்ளனர்.
அந்த சூழ்நிலையில் வங்கதேசத்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ராகுல் மீண்டும் அரை சதம் கூட அடிக்காமல் சுமாராகவே விளையாடினார். இந்நிலையில் இந்திய அணியில் கேஎல் ராகுல் இரண்டாவது ஸ்லிப் பகுதியில் கேட்ச்களை சிறப்பாக பிடித்து ஃபீல்டிங் செய்யக் கூடியவர் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். தற்போது அந்த இடத்திற்கு போட்டியாக ஜெய்ஸ்வால் வந்துள்ளதாக அஸ்வின் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக சென்னை டெஸ்ட் போட்டியில் வங்கதேச வீரர் ஜாகிர் ஹசன் கொடுத்த கேட்ச்சை ஜெயஸ்வால் கிட்டத்தட்ட தரையோடு தரையாக அபாரமாக பிடித்தார். அது பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது பின்வருமாறு. “யசஸ்வி ஜெய்ஸ்வால் அப்பாவியான பையன் கிடையாது. அவர் சோம்பேறியானவர் கிடையாது என்பதை நான் உங்களுக்குச் சொல்வேன். மிகவும் சிறிய பையனான அவர் நிறைய கடின உழைப்பை செய்கிறார்”
“அவரும் பேட்டிங்கில் முதல் இன்னிங்சில் நன்றாக விளையாடினார். நாங்கள் தடுமாறிய போது அவர் 50 ரன்கள் அடித்த அவர் முக்கிய பார்ட்னர்ஷிப் அமைத்தார். அவர் மிகவும் முன்னேறிய ஃபீல்டராக இருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை. கேஎல் ராகுல் 2வது ஸ்லிப் பகுதியில் அற்புதமான ஃபீல்டர். அவருடைய இடத்தை ஜெய்ஸ்வால் எளிதாக நிரப்பக் கூடியவர்”
“என்னைப் பொறுத்த வரை அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள். ஷார்ட் லெக் போன்ற மிகவும் அருகே நின்று கேட்ச் பிடிக்கும் பகுதியில் ஃபீல்டிங் செய்வது மிகவும் கடினம். அது போன்ற இடத்தில் அசத்துவதற்கு எளிதில் நல்ல வீரர்கள் கிடைக்க மாட்டார்கள். ஜெய்ஸ்வால் அங்கே நிற்பதற்கு தயாராக இருக்கிறார். இந்த இடத்தில் நாம் ஃபீல்டிங் பயிற்சியாளர் திலிப் பெயரை அதற்கான பாராட்டுக்காக கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: 2008இல் ரிட்டையராக லக்ஷ்மன் கேட்ச் தான் காரணம்.. இல்லனா 100வது போட்டியில் விளையாடிருப்பேன்.. கில்கிறிஸ்ட்
முன்னதாக 2021 காலகட்டங்களில் ரோஹித் சர்மாவுடன் துவக்க வீரராக ராகுல் களமிறங்கினார். ஆனால் சமீப காலங்களில் தடுமாறிய அவருக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற ஜெய்ஸ்வால் டெஸ்ட் மற்றும் டி20 அணிகளில் ஓப்பனிங் இடத்தை தனதாக்கியுள்ளார். அந்த வரிசையில் தற்போது கேஎல் ராகுல் ஃபீல்டிங் செய்யும் இடத்தையும் அவர் நிரப்ப தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.