இங்கிலாந்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதி போட்டியோடு தோனி இதுவரை இந்திய அணிக்காக விளையாடவில்லை. மேலும் அவர் ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுவரை தனது ஓய்வு குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிடவில்லை.

கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக இந்திய அணியில் இடம் பெறாததால் அவரை பிசிசிஐ வீரர்களின் ஊதிய ஒப்பந்த பட்டியில் இருந்து நீக்கியது. மேலும் இதற்கிடையில் அடுத்த தோனியாக இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டை உருவாக்க தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் பேட்டிங் மற்றும் கீப்பிங் இரண்டிலும் சொதப்பிய பண்ட் தன்மீது வைக்கப்பட்ட நம்பிக்கையை காப்பாற்ற தவறினார்.
ஆஸ்திரேலிய தொடரில் காயமடைந்த அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொண்ட ராகுல் சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்வது மட்டுமின்றி அபாரமாக பேட்டிங் ஆடி தனது இடத்தை உறுதி செய்துள்ளார். ராகுல் விக்கெட் கீப்பிங் செய்வதால் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் அணியில் சேர்க்க வாய்ப்பு கிடைக்கிறது. எனவே நியூசிலாந்து எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும் விக்கெட் கீப்பிங் செய்தார்.

இந்நிலையில் தற்போது அக்டோபர் மாதத்தில் துவங்க இருக்கும் டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு தயாராகி வரும் நிலையில் ராகுல் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் செய்வார் என்று தெரிகிறது. அதேவேளையில் ஹர்டிக் பண்டியா அணிக்கு திரும்பி இருக்கிறார். பண்ட் தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் ஆடும் லெவனில் இல்லாவிட்டாலும் அணியில் தொடர்ந்து பண்ட் இடம்பிடித்து வருகிறார். தற்போது இந்திய அணியின் டி20 உலகக் கோப்பை அணி குறித்து பேசிய வாசிம் ஜாபர் கூறுகையில் : ரிஷப் பண்ட் மற்றும் ராகுல் ஆகிய இருவருமே நன்றாக ஆடுகிறார்கள் இருப்பினும் தோனியின் அனுபவம் இந்திய அணிக்கு நிச்சயம் தேவை. அவர் பின்வரிசையில் இருக்கும் போது அது அணிக்கு முக்கிய மாற்றத்தை தரும்.

மேலும் ஸ்டம்பிற்கு பின்னால் தோனி நிற்பது எப்போதுமே ஒரு தனி பலம்தான் என்று கூறியுள்ளார். மேலும் ராகுல், ரிஷப் பண்ட் உடன் தோனியும் சேர்த்து லெவலில் நிச்சயம் ஆட வைக்க முடியும். ராகுல் தொடக்க வீரராகவும், பண்டினை இடதுகை பேட்ஸ்மேனாகவும், தோனியை பின்வரிசையிலும் கொண்டு இந்திய அணி பங்கேற்கலாம் என்றும் வாசிம் ஜாபர் கூறியது குறிப்பிடத்தக்கது.



