இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரை முடித்து அடுத்து அந்த அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாளை அக்டோபர் 2ஆம் தேதி துவங்க உள்ளது.
இந்நிலையில் நாளைய போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா உலக அளவில் ஒரு புதிய சாதனை ஒன்றை நிகழ்த்த உள்ளார். அந்த சாதனை யாதெனில் இந்திய அணிக்காக 2012 ஆம் ஆண்டு அறிமுகமாகிய ஜடேஜா 43 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 198 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இன்னும் 2 விக்கெட்டுகளை அவர் நாளைய போட்டியில் வீழ்த்துவதன் மூலம் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெறுவார். நாளைய போட்டியில் இந்திய அணி முதலில் பந்து வீசினால் ரவீந்திர ஜடேஜா இந்த சாதனை படைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்று தெரிகிறது.
சமீப காலமாக ஜடேஜா பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என்று பிரைம் பார்மில் இருப்பதால் அவர் இந்த சாதனையை நாளைய போட்டியில் நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.