அண்மையில் இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இழந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. அதற்கடுத்து இந்திய அணிக்கு ஒரு மாத காலம் தற்போது ஓய்வு கிடைத்துள்ளது.
ஜடேஜா மற்றும் சிராஜ் விலகல் :
அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற உள்ள டெஸ்ட் தொடருக்கு முன்னதாக நீண்ட இடைவெளி இருப்பதினால் இந்திய வீரர்கள் அனைவரும் உள்ளூர் தொடரான துலீப் டிராபி போட்டிகளில் கட்டாயம் பங்கு பெற்று விளையாட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசியின் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டது.
அதேபோன்று பயிற்சியாளர் கம்பீரின் சார்பாகவும் வேண்டுகோள் விடப்பட்டது. இதன் காரணமாக இந்தியா ஏ, இந்தியா பி, இந்தியா சி, இந்தியா டி என நான்கு அணிகள் பிரிக்கப்பட்டு அதற்கு நான்கு கேப்டன்களின் தலைமையில் தனித்தனி அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அனுபவ வீரர்களான விராத் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின், பும்ரா போன்றவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள வேளையில் தற்போது முகமது சிராஜ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் இந்த குறிப்பிட்ட தொடரில் விளையாட மாட்டார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஜடேஜா டி20 உலக கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணியில் இடம் பிடிக்காமல் ஓய்வெடுத்து வரும் வேளையில் இந்த ஓய்வு அவருக்கு அவசியம் என்பதனால் துலீப் டிராபி தொடரிலும் அவரை விளையாட வேண்டாம் என கிரிக்கெட் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க : 9 சிக்ஸ் 7 ஃபோர்ஸ்.. 56 பந்தில் 116.. தடுத்த மழை.. தெ.ஆ அணியை ஒய்ட்வாஷ் செய்து பழிதீர்த்த வெ.இ
அதோடு முகமது சிராஜுக்கு தற்போது இடம் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவராலும் இந்த தொடரில் பங்கேற்க முடியாது என்று கூறப்படுகிறது. அதே போன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக்கும் இந்த தொடரில் விளையாட மாட்டார் என்று தெரிகிறது.



