
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக 2024முதல் கௌதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். பொறுப்பேற்று முழுமையாக 2 வருடங்கள் கூட முடியாத நிலையில் அவர் டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். ஏனெனில் 2012 முதல் இந்தியா சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் வெற்றி நடை போட்டது.
ஆனால் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் வந்ததும் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா வரலாறு காணாத ஒயிட்வாஸ் தோல்வியை சந்தித்தது. அந்த வேதனை தீர்வதற்குள் தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 25 வருடங்கள் கழித்து இந்தியா டெஸ்ட் தொடரில் தோற்றுள்ளது. அந்த தோல்விக்கு சோதனை என்ற பெயரில் கௌதம் கம்பீர் செய்த தவறான தேர்வுகள் மற்றும் மாற்றங்கள் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஆல் ரவுண்டர்களை தேர்ந்தெடுக்கும் அவருடைய அணுகுமுறை இதுவரை வெற்றியைக் கொடுக்கவில்லை. அதிலும் நித்திஷ் ரெட்டி போன்ற அரைகுறையான ஆல் ரவுண்டரை அவர் தேர்ந்தெடுத்தது இந்தியாவுக்கு சொந்த மண்ணில் பெரிய பின்னடைவைக் கொடுத்தது. அதனால் ஆல் ரவுண்டர்கள் மீதான கெளதம் கம்பீரின் ஆசையே தோல்விக்கு காரணமானதாக அனில் கும்ப்ளே போன்ற ஜாம்பவான்கள் விமர்சித்தனர்.
இந்நிலையில் எந்த வகையான கிரிக்கெட்டிலும் ஆல் ரவுண்டர்களின் பங்கு வெற்றியில் முக்கியமாக இருக்கும் என்று தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் ஜேக் காலிஸ் தெரிவித்துள்ளார். வரலாற்றின் மிகச்சிறந்த ஆல் ரவுண்டராக அனைவராலும் பாராட்டப்படும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஆம். 100% ஆல் ரவுண்டர்களை தேர்ந்தெடுப்பது உங்களுடைய அணிக்கு சமநிலையைக் கொடுக்கும்”
“அது உங்களுடைய பேட்டிங் வரிசையை ஆழப்படுத்தும். ஆல் ரவுண்டர்களால் பேட்டிங் வரிசை நீளமாகும் போது, உங்களுடைய டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டரில் இருப்பவர்கள் சற்று அதிரடியாக விளையாடுவதற்கான வாய்ப்பையும் பெறுவார்கள். எனவே அது பெரிய வேலை செய்யும் என்பது உங்களுக்குத் தெரியும். அது உங்களுடைய அணியை சமநிலையும் படுத்தும்”
இதையும் படிங்க: இந்தியா – தெ.ஆ 2வது ஒன்டே நடைபெறும் ராய்ப்பூர் மைதானம் எப்படி? பிட்ச் – வெதர் ரிப்போர்ட்
“எனவே எந்த ஃபார்மெட்டிலும் ஆல் ரவுண்டர்கள் முக்கியமானவர்கள் என்று நான் கருதுகிறேன். குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் அது குறிப்பிடத்தக்க பங்காற்றும்” என்று கூறினார். அவருடைய இந்த கருத்து கௌதம் கம்பீரின் அணுகுமுறையை ஆதரிக்கும் வகையில் இருக்கிறது என்றே சொல்லலாம். இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நிறைய ஆல் ரவுண்டர்களை தேர்ந்தெடுப்பது வெற்றிக்கு வித்திடுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.