IND vs RSA : உம்ரான் மாலிக்க்கு வாய்ப்பு கொடுக்க இதைவிட நல்ல தருணம் அமையாது – முன்னாள் கேப்டன் கருத்து

Umran-1
- Advertisement -

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் விளையாடி வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் விறுவிறுப்பான தொடக்கத்தை பெற்றுள்ளது. ஏனெனில் ஜூன் 9இல் துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்த இந்தியா 212 என்ற பெரிய ரன்களை இலக்காக நிர்ணயித்ததால் எளிதாக வென்று விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பந்துவீச்சில் மொத்தமாக சொதப்பிய இந்தியா ரன்களை வாரி வழங்கி அத்துடன் வெற்றியையும் தாரை வார்த்தது. அதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற தென் ஆப்பிரிக்கா இந்தியாவுக்கு சொந்த மண்ணில் தோல்வியை பரிசளித்து 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.

IND vs SA

- Advertisement -

முன்னதாக இந்தத் தொடரில் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வெடுக்கும் நிலையில் ரிஷப் பண்ட் தலைமையில் சமீபத்திய ஐபிஎல் தொடரில் அசத்திய வீரர்கள் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டனர். அதில் தனது அசுர வேகப் பந்துகளால் எதிரணியை திணறடித்த உம்ரான் மாலிக் விவேகத்துடன் கூடிய வேகத்தில் மிரட்டிய அர்ஷிதீப் சிங் ஆகிய இளம் வீரர்கள் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டனர்.

உம்ரானுக்கு வாய்ப்பில்லை:
அதில் 22 வயதிலேயே 150 கி.மீ வேகப்பந்துகளை அசால்டாக வீசி எதிரணி பேட்ஸ்மேன்களின் ஸ்டம்ப்களை தெறிக்கவிட்ட இளம் வீரர் உம்ரான் மாலிக் இந்த வருட ஐபிஎல் தொடரின் ஒரு கண்டுபிடிப்பாகவே பார்க்கப்பட்டார். ஏனெனில் கடந்த வருடம் ஒருசில போட்டிகளில் அசத்தியதால் 4 கோடிக்கு அவரை தக்கவைத்த ஹைதெராபாத் நிர்வாகத்திற்கு இம்முறை பங்கேற்ற 14 போட்டிகளில் 22 விக்கெட்டுகள் எடுத்து தன் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றினார்.

umran

அத்துடன் டெல்லிக்கு எதிரான போட்டியில் 157.0 கி.மீ வேகப்பந்தை வீசிய அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமான பந்தை வீசிய இந்திய பவுலராக இந்த இளம் வயதிலேயே சாதனை படைத்தார். மேலும் ஹைதராபாத் பங்கேற்ற 14 போட்டிகளிலும் அதிவேகமான பந்தை வீசி அதற்காக 14 லட்சங்களை சிறப்பு பரிசாக வென்றார். அந்த அளவுக்கு மிரட்டலாக செயல்பட்ட அவரை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர் போன்ற ஜாம்பவான்களின் கோரிக்கையை ஏற்ற தேர்வுக்குழு இந்த தொடரில் தேர்வு செய்தது.

- Advertisement -

சரியான தருணம்:
அந்த நிலைமையில் இந்த தொடரில் ஜஸ்பிரித் பும்ரா இல்லாத காரணத்தால் இவருக்கு முதல் போட்டியிலேயே வாய்ப்பு கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல் போன்ற சீனியர் பவுலர்கள் இருப்பதால் அவருக்கு யோசித்துதான் பொறுமையாக வாய்ப்பு அளிக்கப்படும் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். அதனால் ஜூன் 12இல் நடைபெறும் இத்தொடரின் 2-வது போட்டியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது.

Umran-1

இந்நிலையில் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் விளையாட தகுதியானவர் என்று அறியப்படும் உம்ரான் மாலிக் முதலில் சொந்த மண்ணில் சிறப்பாக செயல்படுகிறாரா என்பதை சோதிக்க இப்போது வாய்ப்பு வழங்குவதே சரியான தருணம் என்று முன்னாள் இந்திய கேப்டன் திலிப் வெங்சர்க்கார் கூறியுள்ளார். இது பற்றி அவர் தெரிவித்தது பின்வருமாறு.

- Advertisement -

“ஒரு போட்டியை பற்றி அனைவருக்கும் வெவ்வேறு அணுகுமுறைகள் இருக்கும். ஆனால் ஐபிஎல் தொடரில் வேகம் மற்றும் துல்லியத்தால் காட்டிய திறமைக்கு அவர் (உம்ரான்) தற்போது விளையாட தகுதியானவர் என்று கருதுகிறேன். மேலும் சொந்த மண்ணில் நடக்கும் சர்வதேச கிரிக்கெட்டில் அவரைப்போன்றவரை சோதிப்பதற்கு இதுவே சரியான தருணம். கடந்த 10 வருடங்களில் நான் பார்த்த வீரர்களில் அவர் அதிகம் சுவாரசியமானவராக உள்ளார். நல்ல உடல் தகுதியுடன் இருக்கும் அவரின் பந்துவீச்சில் ஆக்ரோஷம் இருப்பதால் கிடைக்கும் வாய்ப்பில் அவர் நிச்சயம் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன். அவரிடம் அற்புதமான வேகமும் துல்லியமும் நிறைந்து இருக்கிறது. எனவே அவர் இந்தியாவுக்காக நீண்ட நாட்கள் விளையாடுவார் என்று கருதுகிறேன்” என கூறினார்.

Dilip

ஐபிஎல் தொடரில் வேகமாக பந்து வீசி விரைவாக இந்தியாவிற்கு விளையாடும் வாய்ப்பை பெற்ற உம்ரான் மாலிக் பெரும்பாலான போட்டிகளில் வேகத்திற்கு ஈடாக ரன்களை வழங்குவதால் அவசரப்பட்டு வாய்ப்பு கொடுக்காமல் 2 – 3 வருடங்கள் குறைவான ரன்களைக் கொடுத்து தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்ட பின் நிரந்தர வாய்ப்பு வழங்கலாம் என்று முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க : நேரலை என்றும் பாராமல் வர்ணனையின்போது காரசார விவாதத்தில் ஈடுபட்ட குக் – மொய்ன் அலி ! நடந்தது என்ன?

ஆனாலும் அதற்கு முதலில் வாய்ப்பு கிடைத்து விளையாடினால் தானே முன்னேற முடியும் என்று தெரிவிக்கும் திலிப் வெங்சர்க்கார் வெளிநாடுகளில் விளையாடுவதற்கு முன் சொந்த மண்ணில் அவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதை பார்க்க இந்த தொடரில் அவருக்கு நிச்சயம் வாய்ப்பளிக்க வேண்டும் என்று இந்திய அணி நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement