இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி இந்திய அணியின் சீனியர் வீரரான இஷாந்த் சர்மாவிற்கு 100-வது போட்டியாகும். இந்நிலையில் தற்போது தான் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான டோனியின் கீழ் விளையாடிய அனுபவம் குறித்து அவர் அஸ்வின் யூடியூப் சேனலுக்கு பேசியபோது கூறியதாவது :
தோனி 100 டெஸ்ட் போட்டிகளை நெருங்கும்போது ஓய்வை அறிவித்தார். அவர் எப்பொழுதும் அணியின் நலனுக்காகவே யோசித்துக் கொண்டிருப்பார். அந்த வேளையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது சஹாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என என்னிடம் தெரிவித்தார். அதனால்தான் சஹாவை அணியில் தொடரவைக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் தான் அவர் திடீரென ஓய்வு அறிவித்தார் என நான் நினைக்கிறேன்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் : தோனி ஓய்வை அறிவித்த போது நான் மிகவும் சோகமாக உணர்ந்தேன். மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் விளையாடும் போது எனக்கு மூட்டு வலி இருந்ததால் அப்போது ஊசியை எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு தோனி ஓய்வு அறிவிக்கப் போகிறார் என்று தெரியாது. அந்த டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தின்போது டோனியிடம் இனிமேல் என்னால் ஊசி போட்டுக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டேன்.
அப்போது தோனி நீ இனிமேல் பவுலிங் போட தேவையில்லை என்று கூறினார். மேலும் சிறிது நேரம் கழித்து என்னிடம் வந்த அவர் நீ இந்த டெஸ்ட் போட்டியில் என்னை தனிமையில் விட்டு விட்டாய் என்று கூறினார். அவர் ஏன் அப்படி சொன்னார் என்று எனக்கு அப்போது புரியவில்லை. பின்னர் அவர் ஓய்வு அறிவித்த பிறகே எனக்கு அவர் கூறிய விடயம் புரிந்தது.
என்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியில் நடுவிலேயே விட்டுச் சென்று விட்டாய் என்று மீண்டும் என்னிடம் கூறினார். அப்போது நான் அதிர்ந்து விட்டேன். இதுதான் தோனியின் கடைசி டெஸ்ட் போட்டி என்று அவர் கூறியிருந்தால் நிச்சயம் விளையாடி இருப்பேன். இந்த சம்பவம் எனக்குள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது என்றும் இஷாந்த் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.