இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அடிலெய்ட் மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை எதிர்கொண்டுள்ளது. ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் வெறும் 36 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய ரசிகர்களை ஏமாற்றியது. இதில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் டெஸ்ட் போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இப்போது ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா தற்போது கர்ப்பமாக இருப்பதால், தன் மனைவியுடன் இருப்பதற்காக அவர் இந்தியா திரும்புகிறார். இதனால் மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மீதமுள்ள 3 போட்டிகளுக்கு இந்திய அணி கேப்டனாக ரகானே செயல்பட உள்ளார்.
அதுமட்டுமின்றி இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு முதல் டெஸ்ட் போட்டியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் அணியிலிருந்து விலகியுள்ளார். இதுகுறித்து ஐபிஎல் தொடரின்போது காயம் காரணமாக வெளியேறி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடாத இந்திய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா அஜிங்கிய ரகானேவின் கேப்டன் பண்பை குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில் :
“இந்திய கேப்டன் ரகானே பவுலர்களின் விருப்பத்திற்கு ஏற்ப விளையாட வைப்பார். பவுலர்களை இதைச் செய், அதைச் செய் என கட்டளையிட்டமாட்டார். நான் அவருடன் பல போட்டிகளில் விளையாடி உள்ளேன். அப்போது நான் பந்துவீசும் போது, பீல்டர்களை எங்கு நிற்க வைக்க வேண்டும் ? இந்த சமயத்தில் உங்களால் பந்துவீச முடியுமா? என பவுலர்களிடம் கலந்து பேசி முடிவு எடுப்பார். இதனால்தான் நான் அவரை பவுலர்களின் கேப்டன் ரகானே என்றேன்” என்று வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா ரகானேவை சிறப்பித்து பேசியுள்ளார்.
ஏற்கனவே ரஹானேவின் கேப்டன்சி குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வர தற்போது இந்திய டெஸ்ட் அணியின் சீனியர் பந்துவீச்சாளரான இஷாந்த் சர்மா இப்படி ஒரு அதிரடி கருத்தினை அளித்துள்ளது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.