இந்தியாவில் 2025 விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் டிசம்பர் 24ஆம் தேதி துவங்கியது. அத்தொடரில் எலைட் குரூப் ஏ பிரிவில் இடம் வகிக்கும் ஜார்க்கண்ட் மற்றும் கர்நாடகா அணிகள் மோதிய போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. காலை 9.00 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற கர்நாடகா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து ஆட்டத்தைத் துவங்கிய ஜார்கண்ட் அணிக்கு உட்கர்ஸ் சிங் 8, சுப் சர்மா 15 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். இருப்பினும் மறுபுறம் நிதானமாக விளையாடிய ஷிகர் மோகன் 44 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். அவருடன் இணைந்து விளையாடிய விராட் சிங் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதமடித்தார்.
33 பந்தில் 100:
எதிர்புறம் வந்த குமார் குஷக்ரா தமது பங்கிற்கு கர்நாடகா பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு 4வது விக்கெட்டுக்கு 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். தொடர்ந்து அசத்திய அவர் அரை சதமடித்து 63 (47) ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்ததாக வந்த கேப்டன் இசான் கிசான் கர்நாடக பவுலர்களை அடித்து நொறுக்கி வேகமாக ரன்கள் குவித்தார்.
அவருடன் இணைந்து எதிர்ப்புறம் அசத்திய விராட் சிங் 88 ரன்கள் குவித்த போது பெவலியன் திரும்பினார். மறுபுறம் தொடர்ந்து அசத்திய இசான் கிசான் 20 பந்துகளில் அரை சதமடித்தார். அப்போதும் ஓயாமல் அடித்து நொறுக்கிய அவர் 33 பந்துகளில் சதத்தை அடித்தார். இதன் வாயிலாக லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 2வது வேகமான சதத்தை அடித்த இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் இசான் கிஷான் படைத்துள்ளார்.
இஷான் கிசான் சாதனை:
இதற்கு முன் 2024 விஜய் ஹசாரே கோப்பையில் பஞ்சாப் வீரர் அன்மோல்ப்ரீத் சிங் 35 பந்துகளில் சதமடித்ததே முந்தைய சாதனையாகும். தொடர்ந்து பட்டாசாக விளையாடிய இசான் 7 பவுண்டரி 14 சிக்ஸருடன் 125 (39) ரன்களை 320.51 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி அவுட்டானார். அவருடைய மிரட்டலான ஆட்டத்தால் 50 ஓவரில் ஜார்க்கண்ட் 412/9 ரன்கள் குவித்து அசத்தியது.
இதையும் படிங்க: பி.சி.சி.ஐ கொடுத்த ஸ்பெஷல் சலுகை.. ஜஸ்ப்ரீத் பும்ராவின் அவசியம் புரிந்து கிடைத்த வாய்ப்பு – விவரம் இதோ
இப்படி உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தி வரும் இஷான் கிசான் 2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் கடைசி நேரத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2025 சயீத் முஸ்டாக் அலி கோப்பை இறுதிப்போட்டியில் ஓப்பனிங்கில் சதமடித்த அவர் கேப்டனாக ஜார்கண்ட் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். தற்போது இப்போட்டியில் 6வது இடத்தில் சதமடித்துள்ள அவர் டி20 உலகக் கோப்பையில் விளையாடத் தகுதியானவன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். குறிப்பாக சுப்மன் கில்லுக்கு பதிலாக ஓப்பனிங்கிலும் ஜிதேஷ் சர்மாவுக்கு பதிலாக மிடில் ஆர்டரிலும் தம்மால் விளையாட முடியும் என்பதை அவர் நிரூபித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



