வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் போராடி வென்ற இந்தியா 2வது போட்டியில் தோல்வியை சந்தித்து பின்னடைவுக்குள்ளானது. குறிப்பாக 2023 உலக கோப்பைக்கு இன்னும் 100 நாட்கள் கூட இல்லாத நிலைமையில் சோதனை என்ற பெயரில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓய்வெடுத்ததால் கிடைத்த வாய்ப்பை பொன்னாக மாற்ற தவறிய இளம் வீரர்கள் 90/0 என்ற நல்ல துவக்கத்தை பெற்றும் 181 ரன்களுக்கு சுருண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் 5 வருடங்கள் கழித்து இந்தியாவுக்கு தோல்வியை பெற்றுக் கொடுத்தனர்.
அதனால் விமர்சனங்கள் எழுந்ததால் 3வது போட்டியில் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் தர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மீண்டும் ஓய்வெடுத்த நிலையில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட்டார். மேலும் இந்திய அணியில் அக்சர் பட்டேலுக்கு பதில் ருதுராஜ் கைக்வாட் மற்றும் உம்ரான் மாலிக்கிற்கு பதிலாக ஜெயதேவ் உனட்கட் தேர்வானார்கள். அந்த நிலைமையில் இத்தொடரை வெல்ல் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் ட்ரினிடாட் நகரில் நகரில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு துவங்கிய 3வது போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அசத்திய கிசான்:
அதை தொடர்ந்து களமிறங்கிய இஷான் கிசான் – சுப்மன் கில் ஆகியோர் ஆரம்பத்தில் நிதானமாகவும் நேரம் செல்ல அதிரடியாகவும் செயல்பட்டு விரைவாக ரன்களை சேர்த்தனர். அதில் ஏற்கனவே முதல் 2 போட்டிகளில் அரைசதம் அடித்த இசான் கிசான் அதே ஃபார்மில் இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டு 143 ரன்கள் ஓப்பனிங் பார்னர்சிப் அமைத்து 8 பவுண்டரி 3 சிக்சருடன் 77 (64) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அப்படி இத்தொடரின் 3 போட்டிகளிலும் 50க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்த அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் தொடர்ச்சியாக அதிக போட்டிகளில் அரை சதங்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற தோனியின் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 2017 சுற்றுப்பயணத்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3, 4 ஆகிய அடுத்தடுத்த போட்டியில் மட்டும் தோனி 2 அரை சதங்கள் அடித்திருந்தார்.
அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் 3 போட்டிகள் கொண்ட ஒரு குறிப்பிட்ட தொடரின் 3 போட்டிகளிலும் தொடர்ச்சியாக 3 அரை சதங்கள் அடித்த 2வது இந்திய விக்கெட் கீப்பர் மற்றும் 6வது இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். அந்த பட்டியல்:
1. கிறிஸ் ஸ்ரீகாந்த் : இலங்கைக்கு எதிராக, 1982
2. திலீப் வெங்சர்க்கார் : இலங்கைக்கு எதிராக, 1985
3. முகமது அசாருதீன் : இலங்கைக்கு எதிராக, 1993
4. எம்எஸ் தோனி : ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2019
5. ஸ்ரேயாஸ் ஐயர் : நியூசிலாந்துக்கு எதிராக, 2020
6. இஷான் கிசான் : வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக, 2023*
அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் 6 இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த இந்திய தொடக்க வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் அவர் உடைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. இஷான் கிசான் : 425*
2. சச்சின் டெண்டுல்கர் : 327
3. சுப்மன் கில் : 323
அப்படி 3 போட்டிகளிலும் அவர் அசத்திய நிலையில் மறுபுறம் தடுமாறி வந்த சுப்மன் கில் ஒருவழியாக இந்த முக்கிய போட்டியில் பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி அரை சதமடித்து இந்தியாவை வலுப்படுத்தி வருகிறார். ஆனால் நீண்ட நாட்கள் கழித்து வாய்ப்பு பெற்ற ருதுராஜ் 8 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அதனால் சற்று முன் வரை 26 ஓவர்களில் இந்தியா 178/2 ரன்கள் எடுத்து விளையாடி வரும் நிலையில் களத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி காட்டி வருகிறார்.



