இந்தியாவில் சயீத் முஸ்டாக் அலி கோப்பை 2025 டி20 கிரிக்கெட் தொடர் நேற்றுடன் முடிந்தது. கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த அத்தொடரின் இறுதிப்போட்டியில் ஹரியானாவை தோற்கடித்த ஜார்கண்ட் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. புனேவில் நேற்று நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய ஜார்கண்ட் அதிரடியாக பேட்டிங் செய்து 20 ஓவரில் 262/3 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக ஹரியானா பவுலர்களை அடித்து நொறுக்கிய கேப்டன் இசான் கிசான் 6 பவுண்டரி 10 சிக்ஸர்களை பறக்க விட்டு சதத்தை அடித்து 101 (49) ரன்கள் குவித்தார். அவருடன் சேர்ந்து குமார் குசக்ரா 81 (38), அங்குல் ராய் 40* (20), ராபின் மின்ஸ் 31* (14) ரன்கள் விளாசினார்கள். அடுத்து விளையாடிய ஹரியானா அதிரடியாக விளையாட முயற்சித்தும் 18.3 ஓவரில் 193 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.
நொறுக்கிய இஷான் கிசான்:
அதிகபட்சமாக யாஸ்வர்தன் தலால் 53 ரன்கள் எடுத்த நிலையில் ஜார்கண்ட் அணிக்கு அதிகபட்சமாக சுஷாந்த் மிஸ்ரா, பால் கிருஷ்ணா தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அதனால் 69 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஜார்க்கண்ட் அணி முதல் முறையாக சயீத் முஸ்டாக் அலி கோப்பையை வென்று புதிய வரலாறு படைத்தது.
அந்த அணியின் வெற்றிக்கு சதமடித்து முக்கிய பங்காற்றிய கேப்டன் இசான் கிசான் ஆட்டநாயகன் விருதை வென்றார். சொல்லப்போனால் இந்தத் தொடர் முழுவதுமே எதிரணிகளை பந்தாடிய அவர் 10 இன்னிங்ஸில் 517 ரன்களை குவித்தார். அதனால் 2025 சயீத் முஸ்டாக் அலி கோப்பையில் அவர் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தினார்.
புதிய உலக சாதனை:
அதே போல இந்தத் தொடரில் எதிரணி பவுலர்களை அடித்து நொறுக்கிய அவர் 33 சிக்ஸர்கள் பறக்க விட்டார். அதனால் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையையும் அவர் படைத்தார். அதை விட ஒரு டி20 தொடரில் அதிக (33) சிக்ஸர்கள் அடித்த விக்கெட் கீப்பர் கேப்டன் என்ற உலக சாதனையையும் இசான் கிசான் படைத்துள்ளார்.
இதையும் படிங்க: 51 ரன்ஸ் 5 விக்கெட்ஸ்.. 30 வருடங்கள் கழித்து ஜோப்ரா ஆர்ச்சர் அபார சாதனை.. ஆஸியில் ஆல் ரவுண்டராக அசத்தல்
இதற்கு முன் 2018 ஐபிஎல் டி20 தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ஜாம்பவான் தோனி 30 சிக்ஸர்கள் அடித்ததே முந்தைய சாதனை. அதே போல துபாயில் நடைபெற்ற 2023/24 ஐஎல் டி20 தொடரில் அணிக்காக எம்ஐ அணிக்காக நிக்கோலஸ் பூரான் 30 சிக்ஸர்கள் அடித்ததே முந்தைய சாதனை. தற்போது அவர்களது சாதனையை தூளாக்கியுள்ள இஷான் கிசான் புதிய சாதனையுடன் இந்திய அணியில் கம்பேக் கொடுப்பதற்கு போராடி வருகிறார்.



