டி20 உலகக்கோப்பையில் வருண் சக்ரவர்த்தி கலக்குவாரு. ஏன் தெரியுமா ? – இர்பான் பதான் ஓபன்டாக்

Irfan
- Advertisement -

தமிழக சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி கடந்த ஜூலை மாதம் இலங்கையில் நடைபெற்ற டி20 தொடரின் போது இந்திய அணிக்காக அறிமுகமானார். அதன் பின்னர் தற்போது அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பை அணியிலும் தேர்வாகியுள்ளார். இதற்கெல்லாம் காரணம் அவரிடம் இருக்கும் பவுலிங் திறமைதான். எப்பேர்பட்ட பேட்ஸ்மேனையும் வீழ்த்தும் திறமை அவரிடம் உள்ளது. இதனை நேற்றைய போட்டியிலும் அவர் செய்து காண்பித்தார். அபுதாபியில் நேற்று பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

varun

- Advertisement -

அதிலும் குறிப்பாக மேக்ஸ்வெல், ஹஸரங்கா, சச்சின் பேபி ஆகியோரது விக்கெட்டை வீழ்த்தி பெங்களூரு அணியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தார். நேற்றைய போட்டியில் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்து 92 ரன்களை மட்டுமே குவிக்க அடுத்ததாக விளையாடிய கொல்கத்தா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தமிழக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி பந்து வீசிய விதம் குறித்து பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வரும் வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் வருண் சக்கரவர்த்தி குறித்து தனது கருத்தினை அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : நிச்சயம் வருண் சக்கரவர்த்தி சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக ஒரு எக்ஸ் பேக்டராக இருப்பார். அவர் ஐபிஎல் தொடரிலும் சரி, இந்திய அணியிலும் சரி நிச்சயம் இனி வரும் போட்டிகளில் முக்கிய வீரராக செயல்படுவார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : 2011 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் ஜாகிர்கான் அதிகளவு நக்குல் பந்துகளை வீச ஆரம்பித்தார். அப்போதுதான் அந்த பந்து புதிதாக வீசப்பட்ட ஒரு பந்து.

varun 2

அதனால் அதனை எந்த ஒரு பேட்ஸ்மேனும் எதிர்கொள்ள முடியாமல் விக்கெட்டை இழந்தனர், அதனால் அந்த தொடரில் ஜாஹிர்கான் ஜொலித்தார். அதே போன்று தற்போது அடுத்த மாதம் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் நிச்சயம் வருண் சக்கரவர்த்தியும் ஜொலிப்பார். ஏனெனில் அவருடைய பந்துவீச்சை இதுவரை சர்வதேச பேட்ஸ்மேன்கள் அதிக அளவில் எதிர்கொண்டது இல்லை. அதுமட்டுமின்றி வருணின் பந்துவீச்சை பேட்ஸ்மேன்கள் அவ்வளவு எளிதில் கணிக்க முடியாது.

varun 1

மேலும் அவரும் அதிகமான போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியதில்லை. இதன் காரணமாக நிச்சயம் உலகக்கோப்பையில் அவரது பந்துகளை பெரிய பெரிய பேட்ஸ்மேன்களும் சந்திக்க திணறுவார்கள். டி20 தொடரில் வருண் சக்கரவர்த்தி நிச்சயம் இந்திய அணிக்காக விக்கெட்டுகளை அள்ளுவார் என்றும் உலக கோப்பையை வெல்ல வருன் சக்ரவர்த்தி எக்ஸ் பேக்டராக இருப்பார் என்றும் இர்பான் பதான் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement