
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது டிசம்பர் 9-ஆம் தேதியான இன்று முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026 டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெறும் மிகப்பெரிய தொடர் என்பதால் இந்த தொடரானது இந்திய அணிக்கு மிக முக்கியமான தொடராக மாறியுள்ளது.
ஏற்கனவே தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்திய இந்திய அணியானது இந்த டி20 தொடரிலும் வெற்றி பெற்று மிகச் சிறப்பாக இந்த தொடரை நிறைவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள துணை கேப்டன் சுப்மன் கில் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம் என்று பார்க்கப்படுகிறது.
ஏனெனில் டி20 போட்டிகளை பொருத்தவரை ஏராளமான இளம் வீரர்கள் தங்களது வாய்ப்புக்காக காத்திருக்கும் வேளையில் சுப்மன் கில் சிறப்பாக செயல்பட வேண்டியது கட்டாயமாக மாறியுள்ளது. இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இந்த தொடரில் சுப்மன் கில் சிறப்பாக செயல்பட்டு துவக்க வீரருக்கான தனது இடத்தினை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரரான இர்பான் பதான் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : சுப்மன் கில் தற்போது டி20 கிரிக்கெட்டில் துவக்க வீரராக விளையாடி வருகிறார். எனவே அவர் அந்த இடத்தை பாதுகாத்துக் கொள்ள சிறப்பாக விளையாடியாக வேண்டும். ஏற்கனவே இந்திய அணியில் பல்வேறு திறமையான வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். ஐபிஎல் போட்டிகளின் போது சுப்மன் கில் சிறப்பாகவே செயல்பட்டுள்ளார்.
எனவே அவர் டி20 போட்டிகளிலும் அற்புதமாக ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறேன். ஒரு சிறிய காயத்திற்கு பிறகு மீண்டும் வந்துள்ள அவர் இந்த தொடரில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணியின் துவக்க வீரராகவும் நிரந்தரத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.
இதையும் படிங்க : இப்போ நான் ரொம்ப நல்லா இருக்கேன்.. தெ.ஆ டி20 தொடருக்கு முன்னதாக – சுப்மன் கில் அளித்த பேட்டி
அதேபோன்று தற்போதைய டி20 அணியில் ஹர்திக் பாண்டியா பினிஷர் என்றாலும் அவருடன் சேர்ந்து பின் வரிசையில் பேட்டிங் செய்யப்போகும் வீரர் யார்? என்ற கேள்வி எனக்குள் இருக்கிறது. அக்சர் பட்டேல், ஜிதேஷ் சர்மா மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் இருக்கும் வேளையில் அவர்களில் யாராவது ஒருவர் பாண்டியாவுடன் இணைந்தால் அதுவும் சிறப்பாக இருக்கும் என இர்பான் பதான் கூறியது குறிப்பிடத்தக்கது.