
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா கடந்த சில ஆண்டுகளாகவே காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால் முக்கியமான போட்டிகளில் மட்டுமே பங்கேற்று விளையாடி வருகிறார். அதோடு அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டு இடையிடையே அவருக்கு தேவையான நேரத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகமும் ஓய்வினை வழங்கி வருகிறது. அதனால் பும்ரா குறிப்பிட்ட தொடர்களில் மட்டுமே பங்கேற்று விளையாடி வருகிறார்.
அந்த வகையில் இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியிருந்த ஜஸ்ப்ரீத் பும்ராவிற்கு ஆஸ்திரேலியா தொடருக்கான ஒருநாள் அணியில் ஓய்வு வழங்கப்பட்டிருந்தது.
பின்னர் தற்போது ஒருநாள் தொடர் முடிந்த கையோடு நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பும்ரா ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு பங்கேற்க இருக்கிறார். இந்த தொடரிலும் ஒரு சில போட்டிகளில் அவர் ஓய்வெடுக்கவும் வாய்ப்புள்ளது. இந்நிலையில் ஜஸ்ப்ரீத் பும்ரா இந்தியாவிற்கு கிடைத்த மிகச் சிறப்பான ஸ்கில்ஃபுல் பவுலர் என இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்தியா எத்தனையோ திறமையான வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்கித் தந்துள்ளது. ஆனால் ஜஸ்ப்ரீத் பும்ராவை போன்ற ஸ்கில்புல் பந்துவீச்சாளரை இதுவரை வழங்கியது கிடையாது என்று நினைக்கிறேன். ஏனெனில் உலகின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் அவர் மூன்று வகையான போட்டிகளிலும் முன்னணி வீரராக இன்றளவும் இருந்து வருகிறார்.
அதோடு டி20 போட்டிகளை பொறுத்தவரை புதுப்பந்தில் அட்டகாசமாக ஆரம்பிக்கும் அவர் மிடில் ஓவர்களிலும் சிறப்பாக பந்துவீசும் திறனை வைத்துள்ளார். அதுமட்டும் இன்றி டெத் ஓவர்களிலும் மிகச் சிறப்பாக பந்துவீசுகிறார். இப்படி எந்த இடத்தில் தன்னை பந்துவீச அழைத்தாலும் அவர் மிகச் சிறப்பாக தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க : இவர் மட்டும் ரன் அடிக்க ஆரம்பிச்சா.. எதிர் டீம் காலி ஆயிடும்.. அபிஷேக் சர்மா இல்ல – பார்த்திவ் பட்டேல் பேட்டி
அதிலும் குறிப்பாக டி20 போட்டிகளை பொருத்தவரை கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் இந்திய அணிக்காக 75 போட்டியில் விளையாடியுள்ள அவர் வெறும் 6 ரன்கள் மட்டுமே (எக்கானமியாக) சராசரியாக வழங்கியுள்ளார். இதைப்போன்று ஒரு பந்துவீச்சாளர் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு நான் பார்த்ததில்லை என்றும் இர்ஃபான் பதான் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.